'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் இருந்து மேலப்புதுக்குடி செல்லும் வழியில் திருமலர்புரம் உள்ளது. இங்கு விவசாய நிலம் அருகில் மின்கம்பம் மிகவும் சாய்ந்த நிலையில் காட்சி அளித்தது. இந்த மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டும் என்று நாலுமாவடி பகுதியைச் சேர்ந்த மும்மூர்த்தி என்பவர் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக மின்வாரிய அதிகாரிகள் அந்த மின்கம்பத்தை சரிசெய்து உள்ளனர். எனவே கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

திறந்து கிடக்கும் மின்பெட்டி

நெல்லை மாவட்டம் திசையன்விளை-நவ்வலடி சாலையில் அமைந்துள்ள ஆயன்குளம் வடக்கு தெருவில் ஊர் பெயர் பலகையின் அருகில் உள்ள மின்கம்பத்தில் மின்பெட்டி திறந்து நிலையில் கிடக்கிறது. குழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் உள்ளதால் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மின்பெட்டியை மூடி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன். ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

குண்டும், குழியுமான சாலை

தென்காசியில் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த தெற்கு மாசி வீதியில் பல இடங்களில் தார் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கேட்டுக் கொள்கிறேன். அம்பலவாணன், குற்றாலம் குடியிருப்பு.

தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள்

ஆலங்குளம் யூனியன் அச்சங்குட்டம் கிராமத்தின் தெற்கு தெருவில் மின்கம்பத்தில் உள்ள மின்கம்பிகள் தாழ்வாக தொங்கிக்கொண்டு இருக்கின்றன. இதனால் அந்த பகுதியில் செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். சுதன், அச்சங்குட்டம்.

வாகன ஓட்டிகள் அவதி

அம்பை-தென்காசி நெடுஞ்சாலையில் கடையம் பாரதிநகர் அருகில் இருந்து சந்தை அருகில் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி பள்ளத்தில் தவறி விழுந்து காயம் அடைகிறார்கள். இதேபோல் திருமலையப்பபுரம் பஸ் நிறுத்தம் அருகில் இருந்து பொட்டல்புதூர் பஸ் நிறுத்தம் அருகில் வரை 1 கிலோ மீட்டர் தூரம் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க கேட்டுக் கொள்கிறேன். திருக்குமரன், கடையம்.

சேதமடைந்த மின்கம்பம்

தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் அருகே சென்னல்பட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் கருங்கல் பாலம் அருகே உள்ள மின்கம்பம் காங்கிரீட் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழும் என்ற அச்சம் உள்ளது. ஆகவே பொதுமக்கள் நலன் கருதி அந்த மின்கம்பத்தை சரிசெய்ய கேட்டுக் கொள்கிறேன். கணேசன், வசவப்பபுரம்.

நாய்கள் தொல்லை

விளாத்திகுளம் தாலுகா நாகலாபுரம் பஞ்சாயத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே தெரு நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? கருப்பசாமி, நாகலாபுரம்.

நோய் பரவும் அபாயம்

புதுக்கோட்டை கிராமத்தில் முக்கிய இணைப்பு சாலையாக கூட்டாம்புளி இணைப்பு சாலை உள்ளது. இங்கு வடிகால் பாதி கட்டப்பட்டு, மீதம் கட்டப்படாமல் உள்ளது. ஊரில் உள்ள அனைத்து கழிவுநீரும் இங்கு வந்து சேருகிறது. மேலும் இறைச்சி கழிவுகளும் அங்கேயே கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். ஸ்டீபன், புதுக்கோட்டை.

பஸ்கள் நின்று செல்லுமா?

நெல்லை-திருச்செந்தூர் மார்க்கமாக செல்லும் அரசு பஸ்கள் ஆழ்வார்திருநகரி முதல் பஸ் நிறுத்தத்தில் நிற்பது இல்லை. இதுபோல் திருச்செந்தூரில் இருந்து நெல்லை வரும் அரசு பஸ்களும் அந்த பஸ் நிறுத்தத்தில் நிற்பது இல்லை. இதனால் அந்த பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். ஆகவே அந்த பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ரமேஷ், ஆழ்வார்திருநகரி.


Next Story