'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஜல்லிக்கற்கள் பரப்பிய தார்சாலை
தர்மபுரி- பென்னாகரம் சாலையில் அமைந்துள்ள டி.என்.வி. நகர் பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தார்சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினா். தார்சாலை போட ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்ட நிலையில் அந்த சாலைப்பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் அந்த சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே தார் சாலை அமைக்கும் பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், தர்மபுரி.
===
இரவில் 108 ஆம்புலன்ஸ் சேவை இல்லை
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ் சேவை இருந்து வந்தது. கடந்த சில மாதங்களாக டிரைவர் பற்றாக்குறையால் மோகனூரில் 108 ஆம்புலன்ஸ் சேவை இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலும் ஊர்களில் இரவு நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை இல்லாததால் விபத்தில் சிக்குபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி மாவட்டத்தில் இரவு நேரங்களிலும் 108 ஆம்புலன்ஸ் சேவை இயங்க நாமக்கல் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தங்கபாண்டியன், மோகனூர், நாமக்கல்.
=
பயன்படாத சுகாதார வளாகம்
சேலம் மாவட்டம் வட்டமுத்தாம்பட்டி அடுத்த எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தன. தற்போது அந்த சுகாதார வளாகம் கடந்த 2 ஆண்டுகளாக பயன்படுத்தாத நிலையில் பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் இந்த சுகாதார வளாகத்தில் கதவுகள், தண்ணீர் தொட்டி இல்லாமல் பல நாட்களாக அப்படியே உள்ளது. இதனால் பெண்கள் கழிவறைக்கு செல்ல முடியாத அவல நிலை இருந்து வருகிறது. எனவே பராமரிப்பு பணிகளை துரிதமாக முடித்து பொதுமக்கள் பயன்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கிள்ளிவளவன், வட்டமுத்தாம்பட்டி, சேலம்.
===
குப்பைகள் அள்ளப்படுமா?
சேலம் அம்மாபேட்டை 39-வது வார்டு வையாபுரி தெருவில் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி உள்ளன. இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. இதனால் கொசுத்தொல்லை, ஈக்கள் அதிகரித்து காணப்படுகின்றன. பள்ளி வளாகத்திற்குள் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மேலும் மாணவ-மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி குப்பைகளை தினமும் அள்ளி தூய்மையாக வைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-க.திலீப்குமார், கார்பெட் தெரு, சேலம்.
===
சாக்கடை கால்வாயில் அடைப்பு
சேலம் அம்மாபேட்டை மெயின் ரோட்டில் சிங்கமெத்தை அருகே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் தேங்கி வீடு மற்றும் சாலைகளில் ஓடுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சாக்காடை கால்வாயை தூர்வாரி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-தேசிகன், அம்மாபேட்டை, சேலம்.
சேலம் அழகாபுரம் திரவுபதி அம்மன் கோவில் அருகே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதால் கழிவுநீர் தேங்கி அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர் வார மாகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வித்யாசாகர், அழகாபுரம், சேலம்.
====
உயர்மின் கோபுர விளக்குகள் எரியவில்லை
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்த காளிப்பட்டி புதியவாடியில் உள்ள உயர் மின் கோபுர விளக்குகள் பழுதடைந்து சில மாதங்களாக எரியவில்லை. அதேபோல் பழைய பாவடியில் உள்ள உயர்மின் கோபுர விளக்கும் எரியவில்லை. இதனை சாகமாக பயன்படுத்து மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபடுகிறார்கள். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் இரவில் வெளியே செல்ல அச்சப்படுகிறார்கள். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அசம்பாவிதங்கள் நடக்கும் முன் உயர்மின் கோபுர விளக்குகளை சரி செய்து எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சரஸ்வதி, காளிப்பட்டி, சேலம்.
====