புகார் பெட்டி
புகார் பெட்டி
பயணிகள் அவதி
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த பஸ் நிலையத்தில் திருவனந்தபுரம் பஸ்கள் வந்து நிறுத்தப்படும் பகுதியில் பயணிகள் ஏறி, இறங்க இடையூறாக சிலர் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.ஜோணி, புதுக்குடியிருப்பு, நாகர்கோவில்.
பஸ்சை சீராக இயக்க வேண்டும்
நாகர்கோவிலில் இருந்து கடியப்பட்டணத்திற்கு மகளிர் கட்டணமில்லா இலவச பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் மூலம் கடியப்பட்டணம் சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வேலைக்கு வரும் பெண்கள் பயன்பெற்று வந்தனர். தற்போது இந்த பஸ் சீராக இயக்கப்படுவதில்லை. மேலும், அந்த பஸ்சின் மேற்கூரையும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், வேலைக்கு செல்லும் பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, தடம் எண் 14-ல் இயக்கப்படும் மகளிர் இலவச பஸ்சை சீராக இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வர்கீஸ், கடியப்பட்டணம்
குப்பைகளை அகற்ற வேண்டும்
திங்கள்நகரில் இருந்து திக்கணங்கோடு செல்லும் சாலையில் பாளையம், கொல்லாய் இடைப்பட்ட பகுதியில் சாலையோரம் கால்வாய் உள்ளது. இந்த பகுதியில் மின்விளக்கு அமைக்கப்படாததால் சிலர் குப்பைகள், கோழிக்கழிவுகள் உள்ளிட்டவற்றை கொட்டி வருகின்றனர். இதனால், அங்கு மழைநீர் வடிந்தோட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குப்பைகளை அகற்றவும், மின்விளக்கு அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.ஜி.பினோஜி, பாளையம்.
கால்வாயை தூர்வார வேண்டும்
நாகர்கோவில் கீழ வண்ணான்விளை பகுதி வழியாக கோட்டார் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயின் உள்ளேயும், சாலையின் ஓரத்திலும் செடிகள் ஆள் உயரத்துக்கு வளர்ந்து காணப்படுகிறது. இதனால், மழைநீர் வடிந்தோட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், விஷ பூச்சிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. எனவே, செடிகளை அகற்றி கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆன்ரோ டெகோசிங் ராஜன், வேதநகர்.
வீணாகும் குடிநீர்
பூதப்பாண்டியில் அழகம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
-பரமசிவன், பூதப்பாண்டி.
சீரமைக்கப்படுமா?
மேலகட்டிமாங்கோடு ஆற்றங்கரையில் இருந்து கிராம நிர்வாக அலுவலகத்துக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் இருந்து பத்ரகாளியம்மன் கோவிலுக்கு பிரிந்து செல்லும் சாலை சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்டது. தற்போது, சாலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக பாய்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குழாய் உடைப்பை சரிசெய்து சாலையை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிதம்பரலிங்கம், மேலகட்டிமாங்கோடு.