புகார் பெட்டி
புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நடவடிக்கை தேவை
ராமநாதபுரம் நகர்ப்பகுதியில் எண்ணற்ற நாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்களை விரட்டுவதால் அவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தப் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஷா, ராமநாதபுரம்.
பஸ் வசதி வேண்டும்
சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இந்த மருத்துவமனைக்கு கானாடுகாத்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பஸ் வசதி இல்லாததால் நோயாளிகள், முதியவர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் என அனைவரும் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கானாடுகாத்தான் மருத்துவமனைக்கு செல்ல பஸ் வசதி ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கானாடுகாத்தான்.
நாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா தாயமங்கலம் ஊராட்சியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலை சுறியுள்ள பகுதிகளில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களை துரத்துவதால் கோவிலுக்கு செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்து ராமு, தாயமங்கலம்.
ஆபத்தான மின்வயர்
மதுரை ஜெய்ஹிந்துபுரம் வள்ளுவர் வடக்கு தெரு பகுதியில் உள்ள மின் வயர்கள் மிகவும் தாழ்ந்த நிலையில் செல்கிறது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். மேலும் மழைக்காலங்களில் இந்த மின் வயர்களினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தாழ்ந்த மின் வயர்களை உயர்த்திக்கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூர்த்தி, மதுரை.
வாகன ஓட்டிகள் அவதி
மதுரை யானைக்கல் பாலத்தின் மேல் பகுதியில் இருபுறமும் அமைத்துள்ள குழாயில் இருந்து மழைக்காலங்களில் வடியும் மழைநீரானது சாலையில் செல்பவர்கள் மீது விழுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் பாத சாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது மழைநீர் குழாயிலிருந்து விழும் மழைநீரை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
அன்புமணி, மதிச்சியம்.
உடைந்து கிடக்கும் பாதாள சாக்கடை மூடி
மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை எதிரில் உள்ள சிக்னல் அருகில் உள்ள பாதாள சாக்கடை மூடியானது உடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க மிகவும் சிரமப்படுகின்றனர். அதிவேகமாக வரும் இருசக்கர வாகனங்கள் பாதாள சாக்கடை மூடியில் ஏறி இறங்கும் போது தடுமாறி கீழே விழும் அபாய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த பாதாள சாக்கடை மூடியை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கரபாண்டியன், செல்லூர்.
குண்டும், குழியுமான சாலை
மதுரை கோசாகுளம் மெயின் ரோட்டில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் ேதங்குவதால் பொதுமக்கள் சாலையில் நடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க சிரமப்படுகின்றனர். எனவே குண்டும், குழியுமான இந்த சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
விக்கி, மதுரை.