புகார் பெட்டி
புகார் பெட்டி
மின்விளக்கு சரி செய்யப்பட்டது
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வைத்தியநாதபுரம் ஆற்றங்கரை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் இருந்தது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கை பொருத்தி எரிய வைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
பஸ்சை இயக்க வேண்டும்
திங்கள்நகரில் இருந்து நாகர்கோவிலுக்கு இரணியல், குருந்தன்கோடு, ஆளூர் வழியாக தடம் எண் 12 'எச்' என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பயனடைந்து வந்தனர். தற்போது இந்த பஸ் திடீரென இயக்கப்படாமல் உள்ளது. இதனால், அந்த பஸ் மூலம் பயன்பெற்று வந்த மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவ-மாணவிகள் நலன்கருதி மீண்டும் அந்த அரசு பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜான் ஆன்டணி, தெக்கன்திருவிளை.
சீரமைக்கப்படுமா?
வடசேரி ஆசாரிமார் வடக்கு தெருவில் சாலையோரத்தில் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடை மற்றும் தெரு சாலையில் பதிக்கப்பட்டுள்ள அலங்கார தரைகற்கள் ஆகியவை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி கழிவுநீர் ஓடையையும், சேதமடைந்த அலங்கார தரை கற்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பரமேஸ்வரன் பிள்ளை, வடசேரி.
சீரான பஸ் வசதி தேவை
நாகர்கோவிலில் இருந்து கடியப்பட்டணத்துக்கு 14 'சி' என்ற மகளிருக்கான கட்டணமில்லா அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் மூலம் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவிகள், வேலைக்குசெல்லும் பெண்கள் பயன்பெற்று வந்தனர். தற்போது இந்த பஸ் சீராக இயக்கப்படுவதில்லை. இதனால், மாணவிகள், பெண்கள் என பலர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு பஸ்சை சீராக இயக்க வேண்டும்.
-வர்கீஸ், கடியப்பட்டணம்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
பறக்கைரோடு சந்திப்பில் இருந்து மணக்குடி செல்லும் சாலையில் இசங்கன்விளை உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு கழிவுநீர் ஓடையில் சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். மேலும், தொலைத்தொடர்பு ஒயர்கள் கொண்டு செல்லும் குழாய்களும் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், ஓடையில் கழிவுகள் தேங்கி தண்ணீர் வடிந்தோட முடியாமல் காணப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடையில் தேங்கி நிற்கும் குப்பைகளை அகற்றுவதுடன், தொலைத்தொடர்பு ஒயர்கள் கொண்டு செல்லும் குழாய்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.சிவபிரகாஷ், இசங்கன்விளை.
மரத்தை அகற்ற வேண்டும்
கீழ ஆசாரிபள்ளம் அரசு நடுநிலைப்பள்ளியின் பின்புறம் பட்டுப்போன மரம் ஒன்று உள்ளது. அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் இந்த மரத்தின் அருகில் விளையாடுவது வழக்கம். எப்போது வேண்டுமானாலும் காற்றில் முறிந்து விழும் நிலையில் உள்ளது. குழந்தைகள் விளையாடும் போது மரம் முறிந்து விழுந்தால் உயிர்சேதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்டுப்போன மரத்தை வெட்டி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.ஆன்டணி சதீஷ், கீழ ஆசாரிபள்ளம்.