தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பையில் கிடக்கும் சிக்னல் விளக்குகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள 4 ரோடு பகுதியில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த சிக்னல் விளக்குகள் பழுதடைந்து குப்பையில் போட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அங்கு சிக்னல் விளக்குகள் இல்லாததால் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் சிக்கி திணறுகிறது. எனவே போக்குவரத்தை நெரிசலை சரிசெய்ய சிக்னல் விளக்குகளை பொருத்த வேண்டும்.
-மாணிக்கம், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி.
தார் சாலை சீரமைக்கப்படுமா?
தர்மபுரி-சேலம் 4 வழி பைபாஸ் சாலையில் இருந்து ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்துக்கு செல்லும் சாலை பிரிகிறது. சுமார் 2 கி.மீ. தொலைவு கொண்ட இந்த தார்சாலை பல இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சேதமடைந்த தார் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், தர்மபுரி.
சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்
சேலம் மாநகராட்சி கண்ணகி தெருவில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் 3 மாதங்கள் ஆகியும் இதுவரை அந்த பணிகள் அப்படியே பாதியில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் அந்த தெருவுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் அமைத்து, சாலையை சீரமைக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், கண்ணகி தெரு, சேலம்.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரை அடுத்த பண்டாரஅள்ளி கிராமத்தில் சாலையில் உயர் அழுத்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் கனரக வாகனங்களால் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பிகளை சரி செய்ய வேண்டும்.
-சிவா, பண்டாரஅள்ளி, தர்மபுரி.
அடிக்கடி பழுதடையும் டிரான்ஸ்பார்மர்
சேலம் மாவட்டம் பெருமாம்பட்டி அரசு பள்ளி அருகே உள்ள அதிக மின்அழுத்தம் கொண்ட டிரான்ஸ்பார்மர் அடிக்கடி பழுதடைகிறது. இதனால் மின் தடை ஏற்படுவதால், குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து டிரான்ஸ்பார்மரை சரிசெய்ய முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சோமு, பெருமாம்பட்டி, சேலம்.
வேகத்தடைகள் புதுப்பிக்கப்படுமா?
சேலம் மாநகரத்தில் சாலைகளின் விபத்தை தவிர்க்கவும், வாகனங்களின் வேகத்தடை கட்டுப்படுத்தவும் ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மெய்யனூர் ரோட்டில் வேகத்தடைகள் சேதமடைந்து உள்ளன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்துள்ள வேகத்தடைகளை புதுப்பிக்க முன்வர வேண்டும்.
-சேகர், சேலம்.
குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
சேலம் புதிய பஸ்நிலையம் செல்லும் வழியில் டி.வி.எஸ். பஸ் நிறுத்தத்தின் அருகே சாக்கடை கால்வாய் செல்கிறது. கால்வாயில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. இதனால் சாக்கடை கால்வாயில் மழைக்காலங்களில் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. கால்வாயை தூர்வாரி கழிவுநீர்செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரகாஷ், அழகாபுரம், சேலம்.