தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேலம்

பஸ் நிலையத்திற்குள் வராத பஸ்கள்

கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர், பெங்களூருவுக்கும், பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக கிருஷ்ணகிரி மற்றும் பிற நகரங்களுக்கும் அரசு பஸ்கள் சென்று வருகின்றன. இவ்வாறு வரக்கூடிய பஸ்கள் சூளகிரி பஸ் நிலையத்திற்குள் வருவதில்லை. இதனால் சூளகிரியை சுற்றி உள்ள கிராம மக்கள் சிரமப்படுகிறார்கள். தேசிய நெடுஞ்சாலையையொட்டி பஸ் நிலையம் இருந்த போதிலும் பல பஸ்கள் மேம்பாலத்தில் சென்று விடுகின்றன. எனவே சூளகிரி சுற்று வட்டார பகுதி மக்களின் நலன் கருதி, சூளகிரியில் அரசு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முனிராஜ், சூளகிரி.

சேறும், சகதியுமான சாலை (படம் உண்டு)

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் நகரின் மையப்பகுதி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக, சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக மத்தூர் பஸ் நிலையம் முதல் நாகம்பட்டி கூட்ரோடு வரையுள்ள சாலையில் எப்பொழுதும் மழைநீர் தேங்கி உள்ளதால் அந்த வழியாக செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மத்தூர் நகரின் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும்.

-தசரதன், மத்தூர், கிருஷ்ணகிரி.

ஏ.டி.எம். சேவை வேண்டும்

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த சிக்கலூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அந்த கிராமத்தில் உள்ளவர்கள் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்கு 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நரிப்பள்ளிக்கு செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் அவசரத்திற்கு கூட பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சிக்கலூர் கிராமத்திற்கு ஏ.டி.எம். மையம் அமைத்து கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.

-பாலகிருஷ்ணன், சிக்கலூர், தர்மபுரி.

சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இருந்து முத்துநாயக்கன்பட்டி செல்லும் வழியில் சாமிநாயக்கன்பட்டி ரெயில்வே கேட் பாலம் உள்ளது. அந்த வழியாக தினமும் இருசக்கர வாகனங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் நடந்து செல்கிறார்கள். மழைக்காலங்களில் அந்த சுரங்கப்பாதையில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். மேலும் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் அந்த வழியாக செல்பவர்கள் அச்சப்படுகிறார்கள். சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காதபடி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தமிழழகன், முத்துநாயக்கன்பட்டி, சேலம்.

பெயர் பலகைகள் சரிசெய்யப்படுமா?

சேலம் மாநகரில் உள்ள தெருக்களுக்கு அந்தந்த தெருவின் தொடக்கத்தில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த பெயர் பலகைகள் சில இடங்களில் சாய்ந்தும், கீழே விழுந்தும், சேதமடைந்தும் காணப்படுகின்றன. குறிப்பாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களுக்கு இடையூறாக உள்ளன. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்துள்ள பெயர் பலகைகளை புதுப்பிக்க வேண்டும்.

-விமல், மரவனேரி, சேலம்.

ஆபத்தான மின்கம்பிகள்

சேலம் மாநகரத்தில் முக்கிய சாலைகள் சந்திக்கும் இடம், சிக்னல் விளக்கு, நடைபாதைகளில் ஆங்காங்கே மின் வயர்கள் தொங்கியபடி காணப்படுகின்றன. இதனால் மழைக்காலங்களில் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆபத்தை ஏற்படு்த்தும் வகையில் தொங்கும் மின் வயர்களை சரிசெய்ய வேண்டும்.

-ராஜன், குகை, சேலம்.


Next Story