'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

அந்தரத்தில் தொங்கும் தெருவிளக்கு

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் 6-வது வார்டு மேட்டு தங்கம்மன் கோவில் தெருவில் சுண்ணாம்பு ஆலை அருகில் உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு பெயர்ந்து அந்தரத்தில் தொங்கியவாறு உள்ளது. இதனால் பலத்த காற்றில் எந்த நேரமும் தெருவிளக்கு கீழே விழும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே தெருவிளக்கை மின்கம்பத்தில் சரியாக பொருத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன். -லோகேஷ், விக்கிரமசிங்கபுரம்.

வேகத்தடைக்கு வர்ணம் தேவை

திசையன்விளை-நவ்வலடி சாலையில் தலைவன்விளை விலக்கில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றுக்கு வெள்ளை நிற வர்ணம் பூசப்படவில்லை. இதனால் இரவில் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே வேகத்தடைகளில் வெள்ளை நிற வர்ணம் பூசுவதுடன், சாலையோரம் எச்சரிக்கை பலகையும் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன். -ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

பஸ் சேவை நீட்டிக்கப்படுமா?

நெல்லை பொருட்காட்சி திடலில் இருந்து மேலதேவநல்லூருக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பத்மனேரி பாலம் வரை நீட்டித்து இயக்க வேண்டும். இதன்மூலம் பத்மனேரி, வடமலைசமுத்திரம், வி.கே.நகர், கீழவடகரை, மேல வடகரை, நெடுவிளை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் நெல்லையில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று படித்து வர உதவியாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் ஆவன செய்வார்களா? -கணேசன், பத்மனேரி.

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

விக்கிரமசிங்கபுரம் காந்திபுரம் தெருவில் குடிநீர் குழாய் உடைத்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்து சீராக குடிநீர் வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். -போஸ், விக்கிரமசிங்கபுரம்.

வேகத்தடை அவசியம்

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர், திருமலையப்பபுரம் பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களின் அருகில் இருந்த வேகத்தடைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று அகற்றினர். பள்ளிக்கூடங்களின் அருகில் வேகமாக வாகனங்கள் செல்வதால், மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அங்கு மீண்டும் வேகத்தடைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். -அம்ஜத், முதலியார்பட்டி.

சேதமடைந்த மின்கம்பம்

தென்காசி அருகே இலத்தூர் நடராஜபுரம் மெயின் ரோட்டில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து சாய்ந்தவாறு உள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அமைந்துள்ள இந்த மின்கம்பம் திடீரென்று சரிந்து விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். -எஸ்ரா டேனியல், இலத்தூர்.

* தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே வெள்ளாளன்விளை தெற்கு தெருவில் சக்தி கோவில் அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து விழுந்து, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் வகையில் எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. ஆகையால் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன். -கிருஷ்ணகுமார், வெள்ளாளன்விளை.

நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

திருச்செந்தூரில் இருந்து தளவாய்புரம், காயாமொழி, பூச்சிக்காடு, நாலுமாவடி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம் வழியாக நெல்லைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் (தடம் எண்: 134 ஏ) கடந்த சில மாதங்களாக திடீரென்று நிறுத்தப்பட்டது. இதனால் திருச்செந்தூர், நாலுமாவடி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதியடைந்துள்ளனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் தொடங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பொன்ராஜ், பூச்சிக்காடு.

ஆபத்தான மின்மாற்றி

கோவில்பட்டி-கடலையூர் ரோடு நீதிபதி குடியிருப்பு கிழக்கு பகுதியில் உள்ள மின்மாற்றியில் உள்ள கம்பங்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால் பலத்த காற்றில் மின்மாற்றி சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த கம்பங்களுக்கு பதிலாக புதிய கம்பங்கள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன். -பாலமுருகன், கோவில்பட்டி.


Next Story