புகார் பெட்டி


புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி

தென்காசி

`தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு

தென்காசி மாவட்டம் பண்பொழி சத்தியவாணிமுத்து நகர் பகுதியில் மின் ஒயர்கள் தாழ்வாக செல்வதாகவும், இதனால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் `தினத்தந்தி' புகார் பெட்டிக்கு வாசகர் மீரான் அனுப்பிய பதிவு பிரசுரம் ஆனது. இதில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைத்து உள்ளனர். இதற்காக `தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

நெல்லை மாநகராட்சி 18-வது வார்டு பேட்டை அண்ணாநகர் வடக்கு பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்க குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதில் அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து சரிசெய்யுமாறு வேண்டுகிறோம்.

-முகம்மது ஹசன், பேட்டை.

தெருநாய்கள் தொல்லை

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் 7-வது வார்டு ராஜாஜி நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அந்த பகுதியில் பள்ளிகள் அமைந்துள்ளதால் அங்கு வரும் மாணவ, மாணவிகள் மற்றும் தெருக்களில் நடமாடும் சிறுவர்-சிறுமிகளையும் தெருநாய்கள் விரட்டிச்செல்கின்றன. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன் தெருநாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தனகுமார், பாளையங்கோட்டை.

வேகத்தடை அமைக்க வேண்டும்

ஆத்தங்கரை பள்ளிவாசலில் இருந்து கிழக்கில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ராமன்குடி செல்லும் சாலையில் நான்கு முக்கு ரோடு உள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே, இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டுகிறேன்.

-கோபாலகிருஷ்ணன், ஆத்தங்கரை பள்ளிவாசல்.

பயணிகள் நிழற்கூடம் தேவை

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குளக்கட்டாக்குறிச்சி தெற்கு காலனி மக்கள் வெளியூர் செல்வதற்காக பஸ் ஏற வேண்டுமானால் கழுகுமலை செல்லும் மெயின்ரோட்டுக்கு வர வேண்டும். ஆனால், இந்த இடத்தில் நிழற்கூடம் இல்லை. இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே, பயணிகள் நின்று பஸ் ஏறிச்செல்ல அந்த பகுதியில் பயணிகள் நிழற்கூடம் அமைத்து தர வேண்டும்.

-ஆனந்தராஜ், குளக்கட்டாக்குறிச்சி.

சாலையில் ஜல்லி கற்கள்

செங்கோட்டை மகாத்மா காந்தி சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரளா மாநிலத்திற்கு சென்று வருகின்றன. இந்த பகுதியில் பம்ப் ஹவுஸ் சாலை முதல் வாஞ்சிநாதன் சிலை வரை சாலையோரத்தில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. அதன்பின்னர் குழிகள் மணல் போட்டு நிரப்பப்பட்டது. ஆனால் தார்சாலையின் ஜல்லி கற்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்கள் செல்வதற்கும் இடையூறாக உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையில் சிதறிக்கிடக்கும் பெரிய ஜல்லிகற்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-ராஜீவ்காந்தி, செங்கோட்டை.

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் ரோட்டில் மின்சார டிரான்ஸ்பார்மர் கம்பம் சேதம் அடைந்து இருந்ததாக `தினத்தந்தி' புகார் பெட்டிக்கு வாசகர் பாலமுருகன் அனுப்பிய பதிவு பிரசுரம் ஆனது. இதில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அதை சீரமைத்து வருகின்றனர். கோரிக்கை நிறைவேற காரணமாக இருந்த `தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

வேகத்தடை அமையுமா?

விளாத்திகுளம் மதுரை சாலையில் உள்ள காய்கறி மார்க்கெட் அருகில் ஆரம்பப்பள்ளி உள்ளது. இந்த பகுதியில் மாணவ, மாணவிகள் ரோட்டை கடந்து செல்கிறார்கள். அந்த வழியாக வரும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.

-ஜாகிர் உசேன், விளாத்திகுளம்.

தெருநாய்களால் பொதுமக்கள் அச்சம்

கயத்தாறு தாலுகா தெற்கு மயிலோடை கிராம ஆற்று ஓடை அருகில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வேலைக்கு செல்ல மக்கள் அச்சப்படுகிறார்கள். மேலும், அங்குள்ள கடைகள், பஸ்நிறுத்தம் அருகிலும் நாய்கள் தொல்லை உள்ளது. அந்த வழியாக செல்லும் மக்களை துரத்தி சென்று கடிக்கிறது. எனவே, தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-முத்துசாமி, தெற்கு மயிலோடை.



Next Story