'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மரக்கிளைகள் வெட்டப்படுமா?
மயிலாடுதுறை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ்நிறுத்தத்தின் அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின்கம்பிகள் அருகே நிற்கும் மரக்கிளைகளில் உரசி செல்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகள், நிறுவனங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. காற்று வீசும் நேரங்களில் மின்கம்பிகளில் தீப்பொறி ஏற்படுவதால் பஸ்நிறுத்ததில் இருந்து பஸ் ஏறும் பொதுமக்கள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரக்கிளைகளில் உரசி செல்லாதவாறு மின்கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும். மேலும் மரக்கிளைகளையும் வெட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-நிர்மல்ராஜ், திருச்சிற்றம்பலம், மயிலாடுதுறை.
சாலை சீரமைக்கப்படுமா?
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவாலி ஊராட்சியில் கீழசாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமலும், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்துள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-வெங்கட்ராஜ், திருவாலி ஊராட்சி.