புகார் பெட்டி
புகார் பெட்டி
காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி
நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறையின் அருகில் ஒரு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் குடிநீர் நிரப்பப்படாமல் காட்சிப் பொருளாக காணப்படுகிறது. இதனால், பஸ்நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து தண்ணீர் நிரப்பி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
-நடராஜன், வடிவீஸ்வரம்.
வீணாகும் குடிநீர்
திக்கணங்கோட்டில் இருந்து கருங்கல் செல்லும் சாலையில் சுனாமி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் மத்திகோடு மற்றும் கருக்குப்பனை ஆகிய இடங்களில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வீணாக பாய்ந்து கொண்டிருக்கிறது. இதனால், சாலை சேதமடைவதுடன், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எட்வின், மத்திகோடு.
சீரமைக்க வேண்டும்
கொட்டாரத்தில் இருந்து கொட்டாரம் சார் பதிவாளர் அலுவலகம், அகஸ்தியர் புதுக்குளம் வழியாக செல்லும் சாலை கன்னியாகுமரி- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் இணைகிறது. இந்த சாலையை விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை வாகனங்கள் மூலமாக எடுத்துச் செல்ல பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, இந்த சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் விவசாயிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ் சந்திரசேகரன், சந்தையடி.
சுகாதார சீர்கேடு
பார்வதிபுரம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் ஓடைகள் மூலம் பல இடங்களில் அந்த பகுதியில் ஓடும் கால்வாயில் கலக்கிறது. இதனால், தண்ணீர் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், அதில் குளிப்பவர்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை கால்வாயில் கலக்காமல் தடுக்க மாற்று திட்டம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.எஸ்.ராஜன், வைத்தியநாதபுரம்.
பள்ளம் சீரமைக்கப்படுமா?
கன்னியாகுமரியில் இருந்து மணக்குடி வழியாக நாகர்கோவில் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை மணக்குடி பாலம் வளைவு பகுதியில் சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டேவிட்சன், புத்தளம்.
சாலையை சீரமைக்க வேண்டும்
நாகர்கோவில் வடசேரியில் ஆராட்டு சாலையில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் எதிரே உள்ள சாலையில் ஏராளமான குடியிருப்புகள், ஆஸ்பத்திரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்தும் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால், அந்த பகுதி மக்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளுக்கு வரும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.ஸ்ரீராம், ஆசாரிபள்ளம்.
ஆபத்தான மரம்
அழகியமண்டபத்தில் இருந்து குலசேகரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் அழகியமண்டபம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் அருகில் மிக உயரமான பனை மரம் ஒன்று ஆபத்தான நிலையில் நிற்கிறது. தற்போது, அந்த பகுதியில் வீசும் காற்றுக்கு பனை மரம் முறிந்து அருகில் உள்ள குடியிருப்புகளின் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் நிற்கும் பனை மரத்தை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தேவசகாயம், அழகியமண்டபம்.
விபத்து அபாயம்
நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பில் ரவுண்டானா அமைப்பதற்காக சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், அங்கு முன்பு இருந்த கட்டுமானங்களை முறையாக அகற்றாததால் சாலையில் ஜல்லிகள் சிதறி கிடக்கின்றன. இதனால், அந்த வழியாக வேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லிகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயராம், ராமவர்மபுரம்.