'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

ஊர் பெயர் பலகை வேண்டும்

நெல்லை மாவட்டம் ராதாபுரம்- விஜயாபதி சாலையில் அமைந்துள்ள வாணியன்குளம் விலக்கில் ஊர் பெயர் பலகை இல்லை. இதனால் புதிதாக வரும் பயணிகளுக்கு ஊரின் பெயர் தெரிவதில் சிரமம் ஏற்படுகிறது. ஆகவே, குறிப்பிட்ட இடத்தில் ஊர் பெயர் பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

காட்சி பொருளான சுகாதார வளாகம்

நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி 1-வது வார்டு பெருமாள்நகர் சின்னமூலைக்கரைப்பட்டியில் சுகாதார வளாகம் உள்ளது. இந்த வளாகம் கட்டப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் காட்சி பொருளாகவே இருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே, இந்த சுகாதார வளாகத்தை உடனடியாக திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மாரிமுத்து, பெருமாள்நகர்.

நாய்கள் தொல்லை

நெல்லை டவுன் குன்னத்தூர் சாலை கன்னியாக்குடி தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. தெருவில் நடந்து செல்லும் பொதுமக்களை நாய்கள் துரத்துகிறது. இதனால் அங்கு செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச் செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மாயாண்டி, நெல்லை டவுன்.

தெருவில் தேங்கும் சாக்கடை நீர்

மானூர் ஊராட்சி ஒன்றியம் வடக்கு வாகைகுளம் கிராமம் நாடார் மேலத்தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். ஆனால், இங்கு சாக்கடை நீர் செல்ல வழி இல்லாததால் தெருவில் தேங்கி கிடக்கின்றது. இதனால் தெருவில் மக்கள் நடந்துக்கூட செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

முத்துக்குமார், வடக்கு வாகைகுளம்.

ஏ.டி.எம். மையம் தேவை

பாளையங்கோட்டையில் இருந்து அம்பை செல்லம் சாலையில் உள்ள தருவை கிராமத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். ஆனால், அங்குள்ள மக்கள் அவசர தேவைக்கு பணம் எடுக்க வேண்டும் என்றால் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முன்னீர்பள்ளத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. ஆகவே, தருவையில் ஏ.டி.எம். மையம் வைத்தால் நன்றாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

பிச்சுமணி, தருவை.

கழிவுநீர் கால்வாய் சீரமைக்க வேண்டும்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஐந்தாங்கட்டளை பகுதியில் ஊர் மத்தியில் உள்ள கழிவுநீர் கால்வாய் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருக்கிறது. மழை காலங்களில் கழிவுநீர் கால்வாய் மூலம் வரும் தண்ணீர் முழுவதும் இந்த இடத்தில் வந்து சேர்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே இந்த கழிவுநீர் கால்வாய்யை சீரமைக்க வேண்டுகிறேன்.

அருண்குமார், ஐந்தாங்கட்டளை.

பாலத்தில் பள்ளம் சரிசெய்யப்படுமா?

முக்கூடல் -ஆலங்குளம் ரோட்டில் சிங்கம்பாறை விலக்கில் ஓடை பாலத்தில் பள்ளம் விழுந்துள்ளது. அதில் யாரும் விழுந்து விடக்கூடாது என்பதற்காக கற்கள் போடப்பட்டு உள்ளது. எனவே பள்ளத்தை உடனடியாக சரிசெய்ய கேட்டுக் கொள்கிறேன்.

ஆறுமுககுமார், சிங்கம்பாறை.

சுகாதாரக்கேடு

குத்துக்கல்வலசை பஞ்சாயத்துக்கு உள்பட்ட 5-வது வார்டு, 3-வது வார்டு இணையும் பகுதியில் கால்வாயில் சாக்கடை தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த கால்வாயை சீரமைத்து தரக்கோரி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்ைக இல்லை. ஆகவே இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

முத்துகிருஷ்ணன், குத்துக்கல்வலசை.

* ஊத்துமலை கிராமத்தில் நெல்லை ரோடு தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

கிருஷ்ணராஜன், ஊத்துமலை.

சேறும், சகதியுமான சாலை

குருவன்கோட்டையில் தார் சாலையில் குண்டும், குழியுமான இருந்தது. இதையடுத்து அதில் கரம்பை மண் போடப்பட்டது. தற்போது பெய்த மழையால் அந்த சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அதில் செல்ல வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

செண்பகராஜ். குருவன்கோட்டை.


Next Story