'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விபத்து அபாயம்

ஆண்டிப்பட்டி பகுதியில் ஆட்டோக்களில் உரிய பாதுகாப்பு இல்லாமல் பெரிய பேனர்களை அஜாக்கிரதையாக எடுத்து செல்கின்றனர். பேனர்கள் சரிந்தால் சாலையில் செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது. இதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேகரன், ஆண்டிப்பட்டி.

பராமரிப்பு இல்லாத கழிப்பறை

தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கர்ப்பிணிகள், குழந்தைகள் உள்பட பலர் தினமும் சிகிச்சைக்கு வருகின்றனர். ஆனால் அங்குள்ள கழிப்பறை முறையான பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. எனவே கழிப்பறையை முறையாக பராமரித்து சுத்தமாக வைக்க வேண்டும்.

-பொதுமக்கள், கெங்குவார்பட்டி.

சாக்கடை கால்வாயில் குப்பைகள்

பழனி அருகே பாப்பம்பட்டி ஊராட்சி குப்பம்பாளையத்தில் சாக்கடை கால்வாயில் குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுவிட்டது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதோடு, மழைக்காலத்தில் மழைநீரும் தேங்கும் நிலை உள்ளது. இந்த சாக்கடை கால்வாயை தூர்வாரி குப்பைகளை அகற்ற வேண்டும்.

-பொதுமக்கள், குப்பம்பாளையம்.

பள்ளி அருகே தேங்கும் மழைநீர்

திண்டுக்கல் அருகே நொச்சிஓடைப்பட்டியில் பள்ளி அருகே மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்துடன் அந்த பகுதியை கடக்கும் நிலை உள்ளது. மாணவர்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு மழைநீர் தேங்காமல் வடிந்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், நொச்சிஓடைப்பட்டி.

தெருநாய்கள் தொல்லை

திண்டுக்கல் பாரதிபுரத்தில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இரவில் வேலை முடிந்து தனியாக செல்லும் நபர்களை துரத்தி, துரத்தி கடிக்கின்றன. மேலும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டபடி சாலையின் குறுக்கே ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்க நேரிடுகிறது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.

-ஜெயச்சந்திரன், திண்டுக்கல்.

சாலையோரத்தில் குப்பைகள்

கொடைரோடு அருகே நான்கு வழிச்சாலையின் ஓரத்தில் குப்பைகள், கழிவுகள் கொட்டி குவிக்கப்படுகின்றன. தற்போது மழை காலமாக இருப்பதால் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. பாதசாரிகள், வாகனங்களில் செல்வோர் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலை உள்ளது. சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.

-ரதிஷ்பாண்டியன், பொம்மணம்பட்டி.

சாலையை சீரமைக்க வேண்டும்

நிலக்கோட்டை தாலுகா பிள்ளையார்நத்தம் கிராமத்தில் தார்சாலை சேதம் அடைந்து காணப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது. இந்த தார்சாலையை சீரமைக்க வேண்டும்.

-பிரபாகரன், பிள்ளையார்நத்தம்.

சுடுகாட்டுக்கு பாதை வசதி

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பழக்கனூத்து ஊராட்சி புதுஎட்டமநாயக்கன்பட்டியில் சுடுகாட்டுக்கு மண் பாதை முழுமையாக இல்லை. இதனால் இறந்தவர்களின் உடலை எடுத்து சென்று அடக்கம் செய்வதற்கு சிரமமாக உள்ளது. முழுமையாக பாதை வசதி செய்து தரவேண்டும்.

-கணபதி, புதுஎட்டமநாயக்கன்பட்டி.

தெருவில் தேங்கிய கழிவுநீர்

கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் போது போடி மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள தெருவில் மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்து ஓடியது. எனினும் தற்போது வரை தெரு முழுவதும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. தெருவை சுத்தம் செய்வதோடு, இனிமேல் தெருவில் கழிவுநீர் செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரவணன், போடி.

ஒருவழிப்பாதையில் வரும் பஸ்கள்

கம்பத்தில் இருந்து சின்னமனூர் வரும் பஸ்கள் ஒருவழிப்பாதையில் எதிரே வருகின்றன. இதனால் ஒரு வழிப்பாதையில் செல்லும் விதிகளை பின்பற்றி செல்லும் பஸ்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் விபத்து அபாயமும் உள்ளது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், சின்னமனூர்.

---------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story