தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

கலங்கலான குடிநீர்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இங்குள்ள கிராமங்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அந்த குடிநீர் கடந்த சில நாட்களாக கலங்கலாக வருகிறது. இந்த நீரை குடிக்கும் பொதுமக்களுக்கு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே நல்ல குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மாரிமுத்து, பெருமாள்நகர்.

சாலை சரிசெய்யப்படுமா?

மானூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நரசிங்கநல்லூர் கிராமம் இந்திராகாலனி தெருவில் ஒரு ஆண்டுக்கு முன்பு ஜல்லிக்கற்கள், மணல் கொண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணி தற்போது பாதியில் நிற்கிறது. இதனால் ஏற்கனவே போடப்பட்ட ஜல்லிக்கற்கள் ஆங்காங்கே பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் சிரமப்படுகிறார்கள். எனவே இந்த சாலையை உடனடியாக சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

தனராஜ், நரசிங்கநல்லூர்.

பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்

பாளையங்கோட்டை யூனியன் திருமலைகொழுந்துபுரத்தில் இருந்து டவுனுக்கு காலை 6 மணி அளவில் டவுன் பஸ் இயக்கப்பட்டது. கொரோனா பாதிப்பிற்கு பின்னர் இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் இருந்து காலையில் வியாபாரத்திற்கு செல்லும் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே இந்த பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

அம்மாபொன்னு, திருமலைகொழுந்துபுரம்.

நிலைக்கம்பியால் இடையூறு

நெல்லை மாவட்டம் சிவந்திபுரம் ஊராட்சி ஆறுமுகம்பட்டி இடுகாட்டிக்கு செல்லும் வழியில் குறுக்கே மின்கம்பத்தில் இருந்து ஸ்டே கம்பி (நிலைக்கம்பி) செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் அவதிப்படுவதோடு, இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இடையூறாக உள்ள அந்த ஸ்டே கம்பியை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

தமிழ்வேந்தன், விக்கிரமசிங்கபுரம்.

ரோட்டின் குறுக்கே பள்ளம்

நெல்லை கொக்கிரகுளத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே மேலப்பாளையம் செல்லும் மெயின் ரோட்டின் குறுக்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே பள்ளத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வசந்த், கொக்கிரகுளம்.

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டியும் பழைய வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. எனவே இந்த கடை புதிய கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கீழக்கலங்கல் பகுதியைச் சேர்ந்த கணேசன் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக தற்போது ரேஷன் கடை புதிய கட்டிடத்தில் இயங்குகிறது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

வாறுகால் வசதி வேண்டும்

பாவூர்சத்திரம் அருகே உள்ள அரியப்பபுரம் பஞ்சாயத்து திரவிய நகரில் வாறுகால் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் சாலையோரத்தில் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக அங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த கழிவுநீரை அகற்றவும், வாறுகால் வசதி செய்து தரவும் கேட்டுக் கொள்கிறேன்.

வெங்கடேஸ்வரன், திரவியநகர்.

குண்டும், குழியுமான சாலை

ஆலங்குளம் அருகே உள்ள கிடாரக்குளத்தில் இருந்து குறிப்பன்குளம் வரை சாலை குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது பெய்த மழையால் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

வெள்ளப்பாண்டி, கிடாரக்குளம்.

சுகாதாரக்கேடு

கீழநீலிதநல்லூர் கிராமத்தில் உள்ள வாறுகால் கடந்த சில ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் அங்கு தூர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. மேலும் நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த வாறுகாலை தூர்வாரி சுகாதாரக்கேட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சுப்பிரமணியன், கீழநீலிதநல்லூர்.

பள்ளம் சரிசெய்யப்படுமா?

ஆலங்குளம்-அம்பை சாலையில் குப்பை கிடங்கு அருகே பெரிய பள்ளம் நீண்ட நாட்களாக சரிசெய்யாமல் கிடக்கிறது. இரவு நேரங்களில் இந்த பள்ளத்தில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். ஆகவே நெடுஞ்சாலைத்துறையினர் இந்த பள்ளத்தை சரிசெய்ய கேட்டுக் கொள்கிறேன்.

சிதம்பரராஜ், காளத்திமடம்.


Next Story