தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

கழிவுநீரில் கிடக்கும் குடிநீர் குழாய்கள்

நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 31-வது வார்டு குறிச்சி பிள்ளையார் கோவில் தெருவில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட உள்ளது. இதற்கான குடிநீர் குழாய்கள், அங்குள்ள கழிவுநீர் வாறுகாலில் வெகு நாட்களாக கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் அடைப்பு ஏற்பட்டு தேங்கி கிடக்கிறது. எனவே குடிநீர் குழாய்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சங்கர், குறிச்சி.

சரியான நேரத்துக்கு பஸ் வருமா?

நெல்லை சந்திப்பில் இருந்து அம்பை தாலுகா வீரவநல்லூர் அருகே உள்ள திருப்புடைமருதூருக்கு தினமும் காலை, மாலையில் அரசு பஸ் இயங்கி வருகிறது. இந்த பஸ் கடந்த ஒரு வாரமாக சரியாக வருவதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே தினமும் சரியான நேரத்துக்கு பஸ் வந்து செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ராதாகிருஷ்ணன், திருப்புடைமருதூர்.

கீழே விழுந்து கிடக்கும் பெயர் பலகை

ராதாபுரம் தாலுகா இருக்கன்துறை பஞ்சாயத்து பொன்னார்குளம் ஊருக்கு தென்புறம் ஊர் பெயர் பலகை கீழே விழுந்து கிடக்கிறது. எனவே பயணிகளுக்கு தெரியும் விதமாக பெயர் பலகையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

நோய் பரவும் அபாயம்

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள சிலப்பதிகார தெருவில் குப்பைகள் மற்றும் மருந்து கழிவுகள் கொட்டப்படுகின்றன. அருகில் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் வசித்து வருகின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விக்னேஷ், வண்ணார்பேட்டை.

குண்டும் குழியுமான சாலை

களக்காடு-நாங்குநேரி சாலையில் உள்ள சுப்பிரமணியபுரத்தில் சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. அப்பகுதியில் வாறுகால் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாக்கடைகள் சாலையில் தேங்கி சாலை சேதமடைந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் இதில் சிக்கி கீழே விழுவதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

தனசேகரன், களக்காடு.

பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்

தென்காசி மாவட்டம் மேட்டூர் ரெயில் நிலையத்துக்கு ஆவுடையானூர், பொடியனூர், அரியபுரம், மேட்டூர், புலவனூர், வெய்க்காலிப்பட்டி, மாதாபுரம், மயிலப்புரம் உள்ளிட்ட அந்தப்பகுதியைச் சேர்ந்த பயணிகள் ஏராளமானோர் தினமும் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். ஆனால் இந்த ரெயில் நிலையத்தில் சுகாதார வளாகம் பூட்டியே கிடக்கிறது. எனவே சுகாதார வளாகத்தை பயன்படுத்தும் வகையில் ரெயில் வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாவது திறந்து வைக்க வேண்டும். மேலும் தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். இதற்கு ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சக்தி, ஆவுடையானூர்.

பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக சுகாதார வளாகம் உள்ளது. ஆனால் இந்த சுகாதார வளாகம் நீண்ட காலமாக பூட்டிக் கிடக்கிறது. எனவே அதனை திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

குமார், பாவூர்சத்திரம்.

பஸ்நிலையத்துக்குள் பஸ் வந்து செல்லுமா?

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து தென்காசி வழியாக தினமும் மதுரைக்கு இயங்கி வரும் அரசு பஸ் (வழித்தடம் எண்- 761) கடையம் பஸ்நிலையத்துக்கு உள்ளே வருவது இல்லை. மெயின் ரோட்டிலேயே பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பஸ்சுக்காக மெயின் ரோட்டில் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பஸ்நிலையத்துக்குள் அந்த பஸ் வந்து செல்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ரமேஷ், கடையம்.

ரோடு மோசம்

சங்கரன்கோவில் தெற்கு ரதவீதி அருகே அமைந்துள்ள கிளாவடி விநாயகர் கோவில் தெருவில் ரோடு மோசமாக உள்ளது. ஆடித்தவசு திருவிழாவை முன்னிட்டு அந்த வழியாக பக்தர்கள் அதிகமாக வருவார்கள். எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணேசன், சங்கரன்கோவில்.

நூலகம் திறக்கப்படுமா?

கடையம் யூனியன் திருமலையப்பபுரத்தில் நூலகம் செயல்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 வருடத்துக்கு முன்பு இந்த நூலகம் பூட்டப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி, மாணவ- மாணவிகள், பொதுமக்கள அவதிப்படுகிறார்கள். சிலர் பக்கத்து ஊர்களில் உள்ள நூலகங்களுக்கு சென்று வாசித்து வருகின்றனர். எனவே, பூட்டிக்கிடக்கும் நூலகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

திருக்குமரன், கடையம்.


Next Story