'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

புகார் பெட்டி செய்தி எதிரொலி

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா ஆற்றங்கரை பள்ளிவாசலில் இருந்து கிழக்கு நோக்கி வரும் சாலையில், நம்பியாற்றை கடந்து நான்கு வழிச்சாலையாக பிரியும் இடத்தில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும், அங்கு வேக்தடை அமைக்க வேண்டும் என தோப்புவிளையை சேர்ந்த வாசகர் பிச்சை, 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக அங்கு வேகத்தடை அமைக்கப்பட்டு, அதன் மீது வர்ணமும் பூசப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி"க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

தேங்கி கிடக்கும் கழிவுநீர்

நெல்லை டவுன் பாட்டப்பத்து நபிகள் நாயகம் தெருவில் கழிவுநீர் வாறுகாலை சரியாக சுத்தம் செய்தில்லை. இதனால் காம்பவுண்டு பகுதிக்குள் கழிவுநீர் வந்து நடைபாதையில் தேங்கி கிடக்கிறது. பள்ளிக்கூட மாணவர்கள் தினமும் அதில் தான் நடந்து செல்கிறார்கள். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, தினமும் வாறுகாலை சுத்தப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சோலையப்பன், நெல்லை டவுன்.

ரெயில் நிலையத்தில் முள்செடிகள் அகற்றப்படுமா?

வீரவநல்லூர் ரெயில் நிலையத்தில் இருந்து அம்பை, தென்காசி, செங்கோட்டை, சேரன்மாதேவி, நெல்லை ஆகிய ஊர்களுக்கு தினமும் ஏராளமான பயணிகள் ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள். இங்கு பயணிகள் இருக்கைகளின் அருகே முள்செடிகள் மற்றும் புதர்கள் மண்டி கிடக்கிறது. இதனால் இருக்கைகளில் அமர முடியாமல் நடைமேடையில் நிற்கின்றனர். எனவே, முள்செடிகளை அகற்றுவதற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

முருகன், புதுக்குடி.

புகாருக்கு உடனடி தீர்வு; குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு

ராதாபுரம்- விஜயாபதி ரோட்டில் ஏ.வி.தாமஸ் மண்டபம் ஊருக்கு வடபுறம் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்வதாக 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு ஆவுடையாள்புரத்தை சேர்ந்த வாசகர் ரவிச்சந்திரன் புகார் அனுப்பி இருந்தார். அதன் எதிரொலியாக குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மரங்களை உரசிச்செல்லும் மின்கம்பிகள்

பாளையங்கோட்டை சித்தா கல்லூரி அருகே உள்ள மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின்கம்பிகள் அந்த பகுதியில் உள்ள மரக்கிளைகளை உரசியபடி செல்கின்றன. தற்போது காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மின்கம்பிகள், மரக்கிளைகளுடன் உரசி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மின்கம்பிகளை உரசியபடி செல்லும் மரக்கிளைகளை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரிச்சந்திரன், பாளையங்கோட்டை.

முள்செடிகள் நிறைந்த சுடுகாட்டு பாதை

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அரியப்பபுரம் பஞ்சாயத்து திரவியநகர் சுடுகாட்டு பாைத முழுவதும் முள்செடிகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் சடலங்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, முள்செடிகளை அகற்றி சாலை வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

வெங்கடேஸ்வரன் ராஜ், திரவியநகர்.

சுகாதாரக்கேடு

ஆலங்குளம் யூனியன் 5-வது வார்டு பிள்ளையார் கோவில் தெருவில் அரசு மாணவர்கள் விடுதி மற்றும் அங்கன்வாடி மையம் அருகே உள்ள வாறுகாலில் சரியாக சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே, வாறுகாலை சுத்தப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ரமேஷ், கடையம்.

அடிப்படை வசதி கிடைக்குமா?

ஆலங்குளம் யூனியன் மேலக்கலங்கல் பஞ்சாயத்து கீழத்தெருவில் தாழ்த்தப்பட்ட சமுதாய குடும்பத்தினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். ஆனால், இங்கு தெரு விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. எனவே, அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சண்முக வேலாயுதம், மேலக்கலங்கல்.

தரைப்பாலம் அமைக்க வேண்டும்

செங்கோட்டை தாலுகா புளியரை கிராமத்தில் யோகீஸ்வரர் நடுத்தெரு முடிவில், தண்ணீர் பாசனத்துக்காக ஓடை தோண்டப்பட்டது. அதன் காரணமாக அந்த தெரு வழியாக விவசாயிகள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே, சிறிய தரைமட்ட பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

தினேஷ், புளியரை.

தெருவிளக்கு எரியவில்லை

கடையம் மெயின் ரோட்டில் உள்ள சுமார் 20 தெருவிளக்குகளில் இரண்டு மின்விளக்குகள் மட்டுமே எரிகிறது. மீதமுள்ள மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி இருளில் மூழ்கி கிடப்பதால் பொதுமக்கள் குறிப்பாக வயதான முதியவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்ல பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, தெருவிளக்குகள் எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜேந்திரன், கடையம்.



Next Story