'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மலைக்கோட்டை அழகை கெடுக்கும் ஆக்கிரமிப்பு

திண்டுக்கல் பெருமையை பறைசாற்றும் மலைக்கோட்டை முன்பு, சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதோடு, குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் அப்பகுதியினர் தங்களது ஆக்கிரமிப்பு பொருட்களை வைத்து மலைக்கோட்டை நுழைவாயிலின் அழகை கெடுத்து வருகின்றனர். எனவே சுற்றுலா பயணிகளை முகம் சுளிக்க வைக்கும்படி தேங்கியுள்ள கழிவுநீர் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

-வினோத், திண்டுக்கல்.

வஞ்சி ஓடையில் கலக்கும் கழிவுநீர்

போடி ரெயில் நிலையம் அருகே வஞ்சி ஓடை செல்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் மழைநீர் இந்த ஓடை வழியாக தான் சென்று ஆற்றில் சேர்கிறது. இதற்கிடையே வஞ்சி ஓடை முழுவதும் செடி, கொடிகள் படர்ந்து கிடப்பதோடு கழிவுநீரும் கலக்கிறது. இதனால் வங்கி ஓடை பாழாகி வருகிறது. இந்த ஓடையை தூர்வாருவதோடு, கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.

-பாண்டி, போடி.

சேதம் அடைந்த சாலை

வேடசந்தூர் அருகே கொடிக்கால்பட்டியில் இருந்து எரியோடு செல்லும் சாலை சேதம் அடைந்து காணப்படுகிறது. சாலை முழுவதும் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமம் அடைகின்றனர். இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெரால்டு, வக்கம்பட்டி.

புதர் மண்டிய மயான பாதை

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி ஒருத்தட்டு கிராமத்தில் இருந்து பொம்மணம்பட்டி மயானத்துக்கு செல்லும் பாதை முட்புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதற்கு சிரமமாக இருக்கிறது. எனவே மயான பாதையில் இருக்கும் புதர்களை அகற்ற வேண்டும்.

-ரதிஷ்பாண்டியன், பொம்மணம்பட்டி.

தார்சாலை வசதி தேவை

கடமலைகுண்டுவை அடுத்த மயிலாடும்பாறை அருகே உள்ள அருகுவெளியில் இருந்து வேட்டைக்காரன்புதூருக்கு தார்சாலை வசதி இல்லை. இதனால் மண் பாதையில் மிகுந்த சிரமத்துடன் வாகனங்கள் சென்று வருகின்றன. மழைக்காலத்தில் மண் பாதை, சகதிக்காடாக மாறிவிடுகிறது. எனவே தார்சாலை வசதி செய்து தரவேண்டும்.

-மலைச்சாமி, அருகுவெளி.

பழுதான தெருவிளக்குகள்

கடமலைக்குண்டு அருகே அரசரடி மலைக்கிராமத்தில் சோலார் தெருவிளக்குகள் பழுதடைந்து விட்டது. இரவில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி விடுவதால், கிராம மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சோலார் தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும்.

-முருகன், அரசரடி.

விபத்து அபாயம்

தேனி அல்லிநகரம் நகராட்சி 33-வது வார்டு கருவேல்நாயக்கன்பட்டி வள்ளுவர் காலனியில் குடிநீர் குழாய் வால்வு, சிமெண்டு சிலாப்பு மூலம் மூடப்பட்டது. அந்த சிமெண்டு சிலாப்பு சேதம் அடைந்து விட்டதால், பள்ளமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அதை தடுக்க புதிதாக சிமெண்டு சிலாப்பு அமைக்க வேண்டும்.

-கதிரவன், தேனி.

போக்குவரத்துக்கு இடையூறு

தேனியில் நேரு சிலை சிக்னல், பழைய பஸ்நிலையத்தில் பஸ்கள் வெளியேறும் பகுதி ஆகியவற்றில் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. ஒருசில நேரம் நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

-கண்ணகி, தேனி.

செடி, கொடிகள் சூழ்ந்த தண்ணீர் தொட்டி

திண்டுக்கல்லை அடுத்த மாலப்பட்டியில் சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியை சுற்றி செடி, கொடிகள் செழித்து வளர்ந்து, தண்ணீர் தொட்டியை மறைத்து வருகிறது. மேலும் அந்த தண்ணீர் தொட்டியின் மின் மோட்டார் பழுதானதால் பயன்பாடின்றி கிடக்கிறது. எனவே செடி, கொடிகளை அகற்றியும், மின் மோட்டார் பழுதை சரிசெய்தும் தண்ணீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

-பொதுமக்கள், மாலப்பட்டி.

குப்பைகளால் துர்நாற்றம்

திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் அருகே சாலையோரத்தில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருஷ்ணன், முருகபவனம்.

-------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

-------


Next Story