புகார் பெட்டி


புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

கூடுதல் பஸ்கள் வேண்டும்

சிவகங்கை மாவட்டம் புழுதிபட்டியிலிருந்து குன்னத்தூர், உலகம்பட்டிக்கு இயக்கப்படும் பஸ் போதுமானதாக இல்லை. இதனால் இந்த வழியாக பயணிக்கும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்கள் வெவ்வேறு பஸ்களில் மாறி, மாறி சென்று வருகின்றனர். இதனால் காலவிரயம் ஏற்பட்டு வேலைக்கு செல்லும் நேரமும் பாதிக்கப்படுகின்றது. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதி, சிவகங்கை.

சுகாதார சீர்கேடு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் உள்ள வடகரை கிராமத்தில் முதல் தெருவில் சாலை வசதியும், வடிகால் வசதியும் கிடையாது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைத்து வடிகால் வசதி அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீரமுத்து, திருப்புவனம்.

குரங்குகள் அட்டகாசம்

சிவகங்கை மாவட்டம் கல்லல் பாரதி நகர் 2-வது வீதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. வீடுகளின் உள்ளே குரங்குகள் புகுந்து உணவு பொருட்களை எடுத்து சென்று விடுகின்றது. வீடுகளின் வெளியே குழந்தைகள் விளையாடும்போது கடிக்க வருகிறது. எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலாஜி, கல்லல்.

வாரச்சந்தை பயன்பாட்டுக்கு வருமா?

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகம் அருகே வாரச்சந்தை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த சந்தை கட்டிடம் திறக்கப்பட்டும் இதுநாள் வரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. எனவே, இந்த வாரச்சந்தையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்புமணி, திருப்பத்தூர்.

வாகன ஓட்டிகள் அவதி

சிவகங்கை நகாின் முக்கிய வீதிகளில் வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்கள் போன்றவை அதிக அளவில் கட்டப்படுகிறது. இந்த கட்டிடங்கள் கட்டுவதற்காக மண், செங்கல், ஜல்லி போன்றவை சாலையோரங்களில் கொட்டப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

பொதுமக்கள், சிவகங்கை.



Next Story