'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருவிளக்கு சரி செய்யப்படுமா?
தேனி மாவட்டம் ஜி.கல்லுப்பட்டியை அடுத்த புனித சூசையப்பர் கிராமம் 3-வது தெருவில் தெருவிளக்கு பழுதாகி ஒரு மாதமாகி விட்டது. தெருவிளக்கு எரியாததால் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கிவிடுகிறது. எனவே தெருவிளக்கை சரிசெய்ய வேண்டும். -கணேசன், ஜி.கல்லுப்பட்டி.
பெண்களுக்கு கழிப்பறை வசதி
பெரியகுளம் தாலுகா எண்டபுளி ஊராட்சி புதுக்கோட்டை கிராமத்தில் பெண்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. இதனால் பெண்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பெண்களுக்கு கழிப்பறை கட்டித்தர வேண்டும். -சூரியபிரகாஷ், புதுக்கோட்டை.
நிரம்பி வழியும் குப்பைகள்
திண்டுக்கல் அய்யங்குளம் அருகே பழனிசாலையில் குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது. மேலும் தொட்டியின் அருகிலும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமு, திண்டுக்கல்.
அதிக வேகத்தடைகளால் ஆபத்து
திண்டுக்கல் அருகே உள்ள கொட்டப்பட்டியில் இருந்து பழனி சாலை வரை 13 இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. இதனால் ஆம்புலன்ஸ் வாகனம் கூட வேகமாக வரமுடியவில்லை. இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றனர். ஒருசில இடங்களில் இருக்கும் வேகத்தடைகளை அகற்ற வேண்டும். -பட்டாபி, கொட்டப்பட்டி.
பள்ளிக்கு சுற்றுச்சுவர்
அய்யம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் வசதி இல்லை. இதனால் இரவில் பள்ளி வளாகத்துக்குள் வேறு நபர்கள் வந்து செல்லும் நிலை உள்ளது. எனவே பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். -ஜெரால்டு, வக்கம்பட்டி.
தெருநாய்கள் தொல்லை
பழனி அருகே கலிக்கநாயக்கன்பட்டியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. தனியாக செல்லும் நபர்களை துரத்தி, துரத்தி கடிக்கின்றன. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தெருநாய்களின் பெருக்கத்தை தடுக்க வேண்டும். -கிருஷ்ணபாரதி, கலிக்கநாயக்கன்பட்டி.
குண்டும், குழியுமான சாலை
பழனி அருகே சின்னகலையம்புத்தூரில் இருந்து நெய்க்காரபட்டிக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து விட்டது. சாலையில் பல இடங்களில் குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?. -முனியப்பன், மானூர்.
புதர் மண்டிய மயானம்
கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு ஊராட்சி சிதம்பரவிலக்கு கிராமத்தின் மயானம், முட்செடிகள் வளர்ந்து புதர் மண்டி காடு போல் காட்சி அளிக்கிறது. மேலும் மயானத்துக்கு உரிய அடிப்படை வசதிகள் இல்லை. எனவே மயானத்தில் உள்ள முட்செடிகளை அகற்றி அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். -பொதுமக்கள், சிதம்பரவிலக்கு.
சாலையில் நிற்கும் மரம்
கம்பத்தில் இருந்து தேனி செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக பெரிய மரம் அகற்றப்படாமல் நிற்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. எனவே மரத்தை அகற்ற வேண்டும். -மணி, கம்பம்.
ரசாயனம் தடவிய மீன்கள்
கம்பம், கூடலூர் பகுதிகளில் மீன்கள் கெட்டு போகாமல் இருப்பதற்கு ரசாயனம் தடவி விற்பனை செய்கின்றனர். இவ்வாறு ரசாயனம் தடவிய மீன்களை வாகனங்களில் கொண்டு வந்து குறைந்த விலைக்கு விற்பதால், பொதுமக்கள் வாங்கி விடுகின்றனர். இதனால் மக்களுக்கு உடல்உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், கூடலூர்.
-----
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.
---