'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

நிலக்கோட்டை தாலுகா பச்சமலையான்கோட்டை ஊராட்சி மேட்டுபட்டி குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் ஒருசில பகுதிகளுக்கு முழுமையாக குடிநீர் வரவில்லை. எனவே குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும். அதன்மூலம் அனைத்து பகுதிகளுக்கும் முழுமையாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஹரீஸ்வர்சன், பச்சமலையான்கோட்டை.

குப்பை குவியல்

திண்டுக்கல்லில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மேற்கு ரதவீதியில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மழையில் அவை நனைந்து துர்நாற்றம் வீசுவதால் மக்கள் நடமாட முடியவில்லை. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.

-சந்திரன், திண்டுக்கல்.

பொது கழிப்பறை திறக்கப்படுமா?

பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சி சத்யாநகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுக்கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டது. எனினும் இதுவரை அது மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் கழிப்பறை இருந்தும் பயனில்லை என்ற நிலை உள்ளது. எனவே பொதுக்கழிப்பறையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

-மணி, பெரியகுளம்.

சாக்கடை கால்வாயில் குப்பைகள்

கம்பம் 14-வது வார்டு செக்கடி தெருவில் சாக்கடை கால்வாயில் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கின்றன. இதனால் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மழைக்காலமாக இருப்பதால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறும் வாய்ப்பு உள்ளது. எனவே கால்வாயில் கிடக்கும் குப்பைகளை அகற்றுவதோடு, இனிமேல் யாரும் குப்பைகளை கொட்டாத வகையில் தடுக்க வேண்டும்.

-மகேஸ்வரன், கம்பம்.

டிரான்ஸ்பார்மர் மாற்றப்படுமா?

சாணார்பட்டி ஒன்றியம் கூவனூத்து ஊராட்சி கவராயபட்டியில் முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதனால் திருவிழா நேரத்தில் பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே டிரான்ஸ்பார்மரை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.

-பொதுமக்கள், கவராயபட்டி.

குடிநீர் குழாய் சேதம்

தேனி மாவட்டம் சாமாண்டிபுரத்தில் குடிநீர் குழாய் சேதம் அடைந்து இருப்பதால், குடிநீர் வெளியேறி வீணாக செல்கிறது. அதேபோல் சாக்கடை கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. எனவே சேதமான குழாயை மாற்றுவதோடு, சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

-முருகேசன், சாமாண்டிபுரம்.

சாலை ஓரத்தில் குப்பைகள்

சின்னமனூர் அருகே சீலையம்பட்டியில் இருந்து வேப்பம்பட்டிக்கு செல்லும் சாலையின் ஓரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் வாகனங்களில் செல்வோர் கூட மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலைஉள்ளது. எனவே சாலை ஓரத்தில் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.

-கதிரவன், தேனி.

சாலையில் அபாய பள்ளம்

திண்டுக்கல் நாகல்நகர் காலேஜ்ஹவுஸ் சாலையில் மடத்து விநாயகர் கோவில் அருகே சாலையின் நடுவே பெரிய பள்ளம் உள்ளது. அந்த இடம் 4 சாலைகள் சந்திக்கும் இடமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றனர். அந்த அபாய பள்ளத்தை சரி செய்ய வேண்டும்.

-ஜெயச்சந்திரன், திண்டுக்கல்.

மருத்துவமனை மேற்கூரை சேதம்

உப்புக்கோட்டையில் அரசு கால்நடை மருத்துவமனையின் மேற்கூரை சேதம் அடைந்து விட்டது. மழைக்காலமாக இருப்பதால் மருத்துவமனையின் மேற்கூரையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், உப்புக்கோட்டை.

சாலையில் தேங்கும் மழைநீர்

திண்டுக்கல் அருகே எரியோட்டில் மின்வாரிய அலுவலகம் முன்பு நான்கு வழிச்சாலையின் இருபக்கத்திலும் மழைநீர் தேங்குவது வழக்கமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். எனவே மழைநீர் வடிந்து செல்வதற்கு வசதி செய்ய வேண்டும்.

-பெரியசாமி, எரியோடு.

--------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.



Next Story