புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

விருதுநகர்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குடிநீர் தட்டுப்பாடு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ராஜபாளையம்.

அறிவிப்பு பலகை வேண்டும்

விருதுநகர் நகராட்சி அலுவலகம் பின் பகுதியில் அரசு சித்த மருத்துவ கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ கட்டிடத்திற்கு செல்ல எந்த ஒரு பெயர் பலகையோ, அறிவிப்பு பலகையோ இல்லை. இதனால் இங்கு வருவோர் சித்த மருத்துவ பிரிவிற்கு செல்ல சிரமம் அடைகின்றனர். எனவே சித்த மருத்துவ பிரிவிற்கு செல்ல அறிவிப்பு பலகை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரத் ராஜா, விருதுநகர்.

குப்பைகள் அகற்றப்படுமா?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி நடுத்தெருவில் தண்ணீர் தொட்டி அருகே குப்பைகள் அகற்றப்படாமல் பல நாட்களாக கிடக்கிறது. இதனால் அதில் இருந்து வரும் துர்நாற்றத்தால் தண்ணீர் பிடிக்க வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குப்பைகளை தினந்தோறும் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகுமார், ராஜபாளையம்.

சாலை சீரமைக்கப்படுமா?

விருதுநகர் புல்லலக்கோட்டை சாலையில் உழவர் சந்தை அருகே உள்ள சாலை, ரெயில்வே பீடர் ரோடு ஆகியவற்றில் சாலை முற்றிலும் சேதமடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சேதமடைந்த இந்த சாலைகளை விரைவாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலாஜி, விருதுநகர்.

போலீஸ் நிலையம் தேவை

காரியாபட்டி தாலுகா முடுக்கன்குளம் கிராமத்தில் போலீஸ் நிலையம் இல்லை. கிராம மக்கள் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் நீண்டநேரம் பயணம் செய்து அ.முக்குளம் போலீஸ் நிலையத்திற்கு தான் செல்ல வேண்டி உள்ளது. எனவே முடுக்கன்குளம் பகுதியில் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ெசந்தில்குமார், காரியாபட்டி.

நோய் பரவும் அபாயம்

மதுரை மாவட்டம் மேலூர் கோட்டநத்தம்பட்டி விவசாய பாசன கால்வாயில் கழிவுநீர் தேக்கமடைந்து கொசுக்கள் உருவாகி டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் துர்நாற்றமும் வீசுவதால் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த கழிவுநீர் கால்வாயினை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்துரு, மேலூர்.

பராமரிப்பற்ற பொதுக்கழிப்பறை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு கிராமத்தில் பொது கழிவறைகள் அனைத்தும் பராமரிப்பின்றி சேதமாகி உள்ளன. தண்ணீர் சரியாக வருவதில்லை. மழை பெய்தால் நீரானது கட்டிடத்தின் உள்ளே புகுந்து விடுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சேதமடைந்த கழிப்பறைகளை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

பொதுமக்கள், அலங்காநல்லூர்.

சாலை அமைப்பார்களா?

மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியம் புதுசுக்காம்பட்டி ஊராட்சி வினோபா காலனி பகுதியில் முறையான சாலை வசதி செய்யப்படவில்லை. மேலும் சாலை அமைக்கும் இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர். எனவே இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துக்குமரன், மேலூர்.

மின்விளக்குகள் வேண்டும்

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பஞ்சாயத்து காளிகாப்பான் கிராமம் கே.ஆர்.கே.தெருவில் கடந்த சில நாட்களாக தெரு விளக்குகள் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே வருவதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதன், கருப்பாயூரணி.

பாலம் அமைக்க வேண்டும்

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சந்தையூர் கிராமத்திற்கு உட்பட்ட எஸ். மேலப்பட்டி பெருமாள் கோவில் தெரு அருந்ததியர் மக்கள் வசிக்கும் தெருவிற்கு மயானத்திற்கு செல்ல பாதை இல்லை. இதனால் நீரோடை வழியாக சென்று உடலை அடக்கம் செய்யும் நிலை உள்ளது. எனவே ஓடையின் குறுக்கே பாலம் கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீனிவாசகம், எஸ்.மேலப்பட்டி.


Related Tags :
Next Story