'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பள்ளத்தில் தேங்கும் மழைநீர்

பாலகிருஷ்ணாபுரம் 2-வது ரெயில்வே கேட் அருகே உள்ள சாலை சேதமடைந்து ஆங்காங்கே பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திண்டுக்கல்லில் பெய்து வரும் மழை காரணமாக அந்த பள்ளங்கள் இருப்பதே தெரியாத அளவுக்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

-ராஜா, திண்டுக்கல்.

மரங்களால் விபத்து அபாயம்

அய்யலூரில் இருந்து கெங்கையூர் செல்லும் சாலையோரத்தில் காய்ந்து கருகிய நிலையில் மரங்கள் உள்ளன. இவற்றின் கிளைகள் எந்த நேரத்திலும் முறிந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே காய்ந்த நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும்.

-குமார், அய்யலூர்.

சாலையில் பரவி கிடக்கும் மணல்

திண்டுக்கல் பாரதிபுரம் சுண்ணாம்பு காளவாசல் தெருவில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையின் நடுவே மணல் பரவி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையில் பரவி கிடக்கும் மணலை அகற்ற வேண்டும்.

-பிரதீப், திண்டுக்கல்.

சாக்கடை கால்வாய் சேதம்

திண்டுக்கல்-நத்தம் சாலையில் மருத்துவர் காலனியில் உள்ள சாக்கடை கால்வாய் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்பதுடன் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சீனிவாசன், திண்டுக்கல்.

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு

சாணார்பட்டி ஒன்றியம் கணவாய்பட்டி பகுதியில் உள்ள குளம் மூலம் 30 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன இந்த நிலையில் குளத்துக்கான நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் குளத்துக்கு தற்போது தண்ணீர் வருவதில்லை. இதனால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிராம மக்கள், கணவாய்பட்டி.

மண்ணில் புதைந்த சிக்னல்

தேனி வீரபாண்டி அருகே போடேந்திரபுரத்தில் சாலையோரத்தில் வைக்கப்பட்ட சிக்னல், அது பொருத்தப்பட்டிருந்த கம்பத்தில் இருந்து முறிந்து கீழே விழுந்து மண்ணில் பாதி புதைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மண்ணில் புதைந்த சிக்னலை அப்புறப்படுத்திவிட்டு புதிய சிக்னலை பொருத்த வேண்டும்.

-பொதுமக்கள், போடேந்திரபுரம்.

சேதமடைந்த சாலை

பெரியகுளத்தை அடுத்த புதுக்கோட்டையில் இருந்து அண்ணாநகர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இரவில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சூரியபிரகாஷ், புதுக்கோட்டை.

புதர்மண்டி கிடக்கும் சாக்கடை கால்வாய்

தேனியை அடுத்த பீரங்கநாதபுரத்தில் இருந்து தேவாரம் செல்லும் பிரதான சாலையோரத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படவில்லை. மேலும் கால்வாயை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடப்பதுடன் குப்பைகள் கொட்டும் இடமாகவும் மாறியுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாருவதுடன் புதர்களையும் அதிகாரிகள் அகற்ற வேண்டும்.

-கோபிநாத், தேனி.

உணவில் கலக்கப்படும் ரசாயன நிறம்

தேனியில் செயல்படும் சில உணவகங்களில் விற்கப்படும் உணவு பொருட்களில் ரசாயன நிறம் சேர்க்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உடல் உபாதைக்கு ஆளாகின்றனர். எனவே உணவு பொருட்களில் ரசாயன நிறம் கலக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விக்னேஷ், தேனி.

வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

கடமலைக்குண்டுவில் இருந்து தேனிக்கு செல்லும் பிரதான சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், கடமலைக்குண்டு.

------------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

----------------------


Next Story