புகார் பெட்டி
புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
மதுரை மாவட்டம் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து குருவித்துறைக்கு குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெரியவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உதயா, மதுரை.
சிறிய பாலம் அமைக்கப்படுமா?
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா எஸ்.மேலப்பட்டி பெருமாள் கோவில் தெருவில் உள்ள மயானத்திற்கு செல்லும் பாதையில் ஓடை ஓடுகிறது. இதனால் இந்த ஓடையை கடந்து இறுதி சடங்கு செய்யும் நிலை உள்ளதால் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஓடையின் குறுக்கே சிறிய பாலம் கட்டித்தர வேண்டும்.
சீனிவாசகம், மதுரை.
விபத்து அபாயம்
மதுரை மாவட்டம் சாமநத்தம் பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ள இந்த சாலையில் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்கராஜ், சாமநத்தம்.
தேங்கிய மழைநீர்
மதுரை மாவட்டம் வில்லாபுரம் 84-வார்டு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும்.
தவமணி, வில்லாபுரம்.
ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம்
மதுரை மாநகராட்சி 23-வதுவார்டு கீழகைலாசபுரம் தாகூர் நகர் கண்மாய்கரை பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கே ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் இல்லை. ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -
சந்தனகுமார், கீழகைலாசபுரம்.