'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு

திண்டுக்கல் நகரில் தடையை மீறி பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுகின்றன. அவற்றை பயன்படுத்தி விட்டு சாக்கடை கால்வாயில் மக்கள் வீசி விடுகின்றனர். சாக்கடை கால்வாய்கள் முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகளாக கிடக்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க பிளாஸ்டிக் பொருட்கள் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயச்சந்திரன், பாரதிபுரம்.

தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்

கடமலைக்குண்டு சங்கம்பட்டி தெருவில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் மண், குப்பைகள் சேர்ந்து சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரக்கேடு ஏற்படும் முன்பு சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும். -குமார், கடமலைக்குண்டு.

சேதம் அடைந்த சாலை

தேனி மாவட்டம் மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி 3-வது வார்டு விநாயகர் கோவில் தெருவில் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. மேலும் மழைக்கு சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதை சரிசெய்ய வேண்டும். -ஜெயகிருஷ்ணன், மேலசொக்கநாதபுரம்.

சாலை வசதி தேவை

கொடைக்கானல் தாலுகா பாச்சலூர் ஊராட்சி நீலாங்கரை கிராமத்தில் ஒரு கி.மீ. தூரத்துக்கு மண் சாலை மழையால் முற்றிலும் உருக்குலைந்து விட்டது. பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு சாலை மோசமாக இருக்கிறது. பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் முறையான சாலை வசதி செய்து தருவார்களா? பொதுமக்கள், நீலாங்கரை.

விபத்து அபாய சாலை

உத்தமபாளையம் பைபாஸ் சாலை சகதிகாடாக மாறிவிட்டதால் வாகன போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் சறுக்கி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும். -பொதுமக்கள் உத்தமபாளையம்.

போக்குவரத்து நெரிசல்

உத்தமபாளையம் தாலுகா கோம்பை பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணி நடக்கிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க சமபந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -இளம்பரிதி, கோம்பை.

சேதம் அடைந்த மின்கம்பம்

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மின்கம்பம் சேதம் அடைந்து விட்டது. சிமெண்டு பூச்சு உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்தபடி எலும்புகூடு போன்று மின்கம்பம் காட்சி அளிக்கிறது. மழை காலமாக இருப்பதால் மின்கம்பத்தை மாற்ற வேண்டும். -ஜெரால்டு, வக்கம்பட்டி.

உருக்குலைந்த தார் சாலை

தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி பேரூராட்சி 8-வது வார்டில் சாலை சேதம் அடைந்து முற்றிலும் உருக்குலைந்து காணப்படுகிறது. முதியவர்கள் மட்டுமின்றி இருசக்கர வாகனங்களில் செல்வோரும் தடுமாறி விழுந்து விடுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தமிழ்செல்வன், கெங்குவார்பட்டி.

பஸ்நிலைய கட்டிடம் பராமரிப்பு

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் உள்ள பழமையான கட்டிடம் சேதம் அடைந்து சிலாப்புகள் பெயர்ந்து விழுகின்றன. இதனால் பயணிகள் அச்சத்துடன் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் நிலை உள்ளது. அதை தவிர்க்க பஸ்நிலைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். -முகமதுஅலி ஜின்னா, திண்டுக்கல்.

சேறும், சகதியுமான சாலை

திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் தடுப்புச்சுவர், சாக்கடை கால்வாய் பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும். -ராம், திண்டுக்கல்.

-------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

-------


Next Story