புகார் பெட்டி
புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வேகத்தடை அமைக்க வேண்டும்
மதுரை மாவட்டம் மாணிக்கம்பட்டி கிராம சாலையில் வாகனங்கள் அதிவேகத்தில் வருகின்றன. இதனால் இந்த சாலையை கடக்க முடியாமல் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் கால்நடைகள் விபத்தில் சிக்கி காயம் அடைகிறது. எனவே அதிகாரிகள் இந்த சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்க வேண்டும். ரதீஷ், மாணிக்கம்பட்டி.
ஒளிராத தெரு விளக்குகள்
மதுரை மாநகராட்சி 30-வது வார்டு மதிச்சியம் முத்து தெரு இரண்டாவது சந்தில் உள்ள மின்விளக்குகள் கடந்த சிலநாட்களாக எரிவதில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே எரியாத தெருவிளக்கை அப்புறப்படுத்தி புதிதாக பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், மதிச்சியம்.
தேங்கும் கழிவுநீர்
மதுரை மாவட்டம் அண்டமான் கிராமமந்தை திடலில் மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி இப்பகுதியின் சுகாதாரத்தை பாதிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.
விஸ்வநாதன், மதுரை.
விபத்து அபாயம்
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ராம் நகர், ராமுண்ணி நகர் மற்றும் கள்ளிக்குடி சாலைகளில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்துவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
சக்திவேல், டி.கல்லுப்பட்டி.
நடவடிக்கை தேவை
மதுரை தெற்குவாசல் பஸ் நிறுத்தம் மற்றும் தெற்கு மாரட் வீதியில் பாதாள சாக்கடை மூடிகளை உயர்த்துவதற்காக தோண்டிய பள்ளங்களை கான்கிரீட் போட்டு மூடாமல் அப்படியே போட்டு உள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரத்தினகுமார், மதுரை.