புகார் பெட்டி
புகார் பெட்டி
செடிகள் அகற்றப்பட்டது
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்பு கோவிலில் பாராமரிப்பு பணிகள் சரிவர நடைபெறவில்லை. இதனால், கோவில் காம்பவுண்டு சுவரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பறவைகளின் எச்சங்கள் மூலம் அரசவிதைகள் முளைத்து காணப்பட்டது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து காம்பவுண்டு சுவரில் வளர்ந்த மரக்கன்றுகளை வெட்டி அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள், பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள் அவதி
அழகியமண்டபம் சந்திப்பு பகுதி எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த சந்திப்பு பகுதியில் மின்விளக்குகள் அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சந்திப்பு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆலிவர், அழகியமண்டபம்.
தெரு விளக்குகள் அமைக்கப்படுமா?
மயிலாடி, ஆராட்டு மடத்தில் இருந்து பொற்றையடி செல்லும் சாலையில் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் வரை மின்கம்பங்களோ, தெரு விளக்குகளோ அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக இரவு நேரம் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அச்சத்துடனேயே அந்த இடத்தை கடந்து செல்கின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி அந்த பகுதியில் மின்கம்பங்கள் அமைத்து விளக்கு பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சி.ராம்தாஸ், சந்தையடி.
நடவடிக்கை ேதவை
திப்பிறமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் முடவக்குளம் உள்ளது. இந்த குளத்துக்கு கருங்கலில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் சாலையில் இருந்தும் ஒரு பாதை இருந்தது. தற்போது அந்த பாதை அடைக்கப்பட்டு அங்கு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் குளத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த இடத்தில் மீண்டும் பாதை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காளிதாசன், திப்பிறமலை.
போக்குவரத்து நெருக்கடி
அழகப்பபுரம் பேரூராட்சியில் பஸ் நிலையத்துக்கு செல்லும் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியின் முன்பு உள்ள சாலையின் இரு பக்கங்களிலும் இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து நெருங்கடி ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை சாலையில் நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜஸ்டின், அழகப்பபுரம்.
விபத்து அபாயம்
கீழவண்ணான்விளை ஊர் முத்தாரம்மன் கோவிலும், அதன் அருகில் ஒரு தென்னை மரமும் உள்ளது. இந்த ெதன்னை மரம் அருகில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தின் மீது சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. கிளைகளும் மின்கம்பியில் உரசியபடி உள்ளது. இதை அறியாது மரத்தில் ஏறும் நபர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரக்கிளைகளை வெட்டி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோபி, கீழவண்ணான்விளை.