புகார் பெட்டி
புகார் பெட்டி
மின்கம்பம் மாற்றப்பட்டது
தாழக்குடி ேபரூராட்சியில் மீனமங்கலத்தில் இருந்து வெள்ளமடம் ஆற்றங்கரைக்கு செல்லும் சாலையில் சந்தைவிளை புதிய பாலம் அருகில் ஒரு மின்கம்பத்தின் மேல் பகுதி சேதமடைந்து காணப்பட்டது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வந்தனர். இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நட்டனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
மதுக்கடை மாற்றப்படுமா?
உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சிலுவை நகரில் குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் அரசு மதுக்கடை அண்மையில் திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையின் அருகில் குடியிருப்புகள், பஸ் நிறுத்தம், ேகாவில்கள் உள்ளன. மதுக்கடை அமைக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி அங்கு விபத்துகள், தகராறுகள் ஏற்பட்டு வருகிறது. இதனால், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, மாணவ-மாணவிகள் நலன்கருதி மதுக்கடை அங்கிருந்து அப்புறப்படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சகாயதினேஷ், சிலுவைநகர், கன்னியாகுமரி.
விபத்து அபாயம்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வெட்டூா்ணிமடத்தில் இருந்து பார்வதிபுரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் ஒரு தனியார் பள்ளியின் முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாவதுடன், விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜ்குமார், சர்ச்தெரு, நாகர்கோவில்.
குடிநீர் வினியோகம் தேவை
நுள்ளிவிளை ஊராட்சியில் பேயன்குழி உள்ளது. இந்த பகுதியில் கடந்த 2 வாரங்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தண்ணீருக்காக பெண்கள் பல இடங்களுக்கு அலைய வேண்டிய நிலைக்க தள்ளப்பட்டுள்ளனர். மழை நேரங்களில் அந்த தண்ணீரை சேகரித்து அன்றாட தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சீரான குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுபின்ஜி, பேயன்குழி.
வீணாகும் குடிநீர்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பீச்ரோடு அருகில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கின் எதிரே ஆயுதப்படை மைதானத்துக்கு செல்லும் சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக குடிநீர் வீணாக சாலையில் பாய்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்து, கோட்டார்.
சேதமடைந்த மின்கம்பம்
அகஸ்தீஸ்வரம் அருகே சுக்குப்பாறை தேரிவிளை ஊர் உள்ளது. இந்த ஊரில் காந்திநகர் பகுதியில் ஒரு மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சி.ராம்தாஸ், சந்தையடி.