'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மின்கம்பங்களால் போக்குவரத்து நெரிசல்
வத்தலக்குண்டு நகரின் முக்கிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த வாரம் பெரியகுளம் சாலை, மெயின் ரோடு, மதுரை சாலை, திண்டுக்கல் சாலை ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இருப்பினும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. இதற்கு சாலையில் இடையூறாக உள்ள மின்கம்பங்களே காரணம். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை ஓரமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சவுந்தர், வத்தலக்குண்டு.
தெருவில் ஓடும் கழிவுநீர்
திண்டுக்கல் மாநகராட்சி 14-வது வார்டு அண்ணாநகரில் தெருவில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. அந்த கழிவுநீரில் நடந்து தான் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜமால்முகமது, ரவுண்டுரோடு.
குப்பை தீவைத்து எரிப்பு
வேடசந்தூர் வசந்தநகரில் குப்பைகளை ஓரிடத்தில் கொட்டி தீவைத்து எரிக்கின்றனர். எரியும் குப்பைகளில் இருந்து வெளியேறும் கரும்புகை குடியிருப்பு பகுதிக்கு பரவுகிறது. இதனால் முதியவர்கள், நோயாளிகளுக்கு சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினை ஏற்படுகிறது. எனவே குப்பைகள் எரிக்கப்படுவதை தடுத்து அகற்ற வேண்டும்.
-ரோஜாபிரியன், வேடசந்தூர்.
சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?
தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியில் குடோன் எதிரே உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகரித்து விட்டது. இந்த சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.
-கணேசன், ஜி.கல்லுப்பட்டி.
பாதாள சாக்கடையால் பள்ளம்
திண்டுக்கல் ஆர்.எஸ்.சாலையில் பாதாள சாக்கடை மூடிகள் அமைந்த இடம் பள்ளமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே பாதாள சாக்கடை மூடிகள் அமைந்த இடத்தை சீரமைக்க வேண்டும்.
-ஜெயச்சந்திரன், திண்டுக்கல்.
சாலையை ஆக்கிரமித்த முட்செடிகள்
திண்டுக்கல்-செம்பட்டி சாலையில் வக்கம்பட்டி அருகே சாலை ஓரத்தில் வளர்ந்துள்ள முட்செடிகள் சாலையை ஆக்கிரமித்து உள்ளன. இதனால் வாகனங்களில் செல்வோரை முட்செடிகள் பதம் பார்த்து விடுகின்றன. வாகனங்கள் ஒதுங்கி செல்ல முடியவில்லை. இந்த முட்செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், வக்கம்பட்டி.
மாணவர் விடுதி பராமரிக்கப்படுமா?
சின்னமனூர் அருகே எரசநாயக்கனூரில் உள்ள மாணவர் விடுதியின் முகப்பு கட்டிடம், சுற்றுச்சுவர் சேதம் அடைந்து விட்டது. தற்போது மழைக்காலமாக இருப்பதால் மாணவர்கள் அச்சத்துடன் தங்கும் நிலை உள்ளது. எனவே விடுதி கட்டிடத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.
-அசோக்குமார், கம்பம்.
ஓடையை ஆக்கிரமித்த செடிகள்
கடமலைக்குண்டுவில் உள்ள பாலூத்து ஓடையில் செடிகள் அதிக அளவில் வளர்ந்து ஓடையை ஆக்கிரமித்து விட்டன. இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் குடியிருப்புக்குள் புகுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே ஓடையை தூர்வாரி செடிகளை அகற்ற வேண்டும்.
-பொதுமக்கள், கடமலைக்குண்டு.
சாக்கடை கால்வாய் சீரமைப்பு
தேனி மாவட்டம் மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி 9-வது வார்டில் தேவராம் செல்லும் மெயின்ரோட்டின் ஓரத்தில் அமைந்துள்ள சாக்கடை கால்வாய் மூடிக்கிடக்கிறது. இதனால் கழிவுநீர், மழைநீர் செல்வதற்கு வசதி இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும்.
-பொதுமக்கள், மேலசொக்கநாதபுரம்.
சாக்கடை கால்வாய் வசதி தேவை
உத்தமபாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் தெருவில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் தெருவில் ஓடை போன்று செல்கிறது. அதில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோயை பரப்பும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும்.
-ரவி, அப்பிபட்டி.
------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.
------