'தினத்தந்தி' புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

சேதமடைந்து வரும் மின்கம்பம்

கீரனூரை அடுத்த தொப்பம்பட்டி 5-வது வார்டு சாம்புராயன் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து வருகிறது. இரும்பால் ஆன அந்த மின்கம்பத்தின் அடியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்த நிலையில் உள்ளன. இதனால் எந்த நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரத்தினசாமி, தொப்பம்பட்டி.

சாலையில் தேங்கும் கழிவுநீர்

தேனியை அடுத்த சின்னஓவுலாபுரம் பட்டாலம்மன் கோவில் தெருவில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாய் பணியை முறையாக மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சங்கீதா, சின்னஓவுலாபுரம்.

எலும்புக்கூடு போல் காட்சியளிக்கும் மின்கம்பம்

வடமதுரை முத்துநகரில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிவதால் மின்கம்பம் தற்போது எலும்பு கூடு போல் காட்சியளிக்கிறது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றிவிட்டு புதிய மின்கம்பம் நட்டுவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலன், வடமதுரை.

மண்பாதையாக மாறும் தார்சாலை

நிலக்கோட்டை அருகே என்.மீனாட்சிபுரத்தில் இருந்து என்.கோவில்பட்டிக்கு செல்லும் தார்சாலை சேதமடைந்து வருகிறது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்ததால் தார்சாலை மண்பாதையாக மாறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாக்கியராஜ், என்.மீனாட்சிபுரம்.

இணையதள சேவை கிடைப்பதில்லை

செந்துறையை அடுத்த பிள்ளையார்நத்தம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தொலை தொடர்பு வசதி முறையாக செய்யப்படவில்லை. இதனால் இணையதள சேவையும் சரிவர கிடைப்பதில்லை. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் கூட அவசர உதவிக்கு யாரையும் அழைக்கமுடியாத நிலை உள்ளது. எனவே தொலை தொடர்பு வசதியை முறையாக செய்து கொடுக்க வேண்டும்.

-ஊர் பொதுமக்கள், பிள்ளையார்நத்தம்.

கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு

திண்டுக்கல்-பழனி சாலையில் பைபாஸ் ரோடு சந்திக்கும் இடத்தில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சாக்கடை கால்வாய் வசதி முறையாக செய்யப்படாததால் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வக்கண்ணன், திண்டுக்கல்.

மின்கம்பிகளை உரசும் மரக்கிளைகள்

கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தையொட்டி மரங்கள் ஏராளமாக உள்ளன. இவற்றின் கிளைகள் சாலையோரத்தில் நட்டு வைக்கப்பட்டுள்ள மின்கம்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள மின்கம்பிகளில் உரசியபடி செல்கின்றன. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.

-வினிதா, கம்பம்.

சேதம் அடைந்த சாலை

தேனி பாரஸ்ட் ரோட்டில் பல இடங்களில் தார்சாலை சேதம் அடைந்து பள்ளங்கள் உருவாகி உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லட்சுமி, தேனி

பக்தர்கள் பரிதவிப்பு

தேனி பழைய பஸ் நிலையத்தில் இருந்து காட்டு பத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையில் காலை, மாலை நேரங்களில் மதுபோதையில் பலர் சுற்றித் திரிகின்றனர். திறந்தவெளியிலும் மது அருந்துகின்றனர். இதனால் கோவிலுக்கு சென்று வரும் பெண்கள் அச்சம் அடைகின்றனர். எனவே, இப்பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

-செல்வம், தேனி.

சாலையோரத்தில் குவியும் செங்கல் கற்கள்

கம்பத்தில் இருந்து சுருளி அருவிக்கு செல்லும் சாலையோரத்தை ஆக்கிரமித்து சிலர் சேதமடைந்த செங்கல் கற்களை குவித்து வைக்கின்றனர். இதனால் இரவில் அந்த வழியாக செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே செங்கல் கற்கள் குவித்து வைக்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரஞ்சித்குமார், கம்பம்.



Next Story