புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

கன்னியாகுமரி

விபத்து அபாயம்

நாகர்கோவில் பார்வதிபுரத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பாலத்தின் மையப்பகுதியில் இருவழியையும் வாகனங்கள் செல்வதற்கு வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், சில இடங்களில் தடுப்புகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த தடுப்பு வேலிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஸ்ரீராம், ஆசாரிபள்ளம்.

சீரமைக்கப்படுமா?

புகழ்பெற்ற சுற்றுலாமாக மாத்தூர் தொட்டிப்பாலம் விளங்கி வருகிறது. இங்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அதன் அருகில் உள்ள பூங்காவுக்கு சென்று விளையாடுவது வழக்கம். இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு ஊஞ்சல் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், இங்கு விளையாட வரும் குழந்தைகள் கீழே விழுந்து படுகாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சேதமடைந்த ஊஞ்சலை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுனில்ராஜேஷ், முதலார்.

பழுதடைந்த தெருவிளக்கு

கணபதிபுரத்தில் தபால் நிலையம் உள்ளது. இதன் அருகில் உள்ள சாலையில் தெருவிளக்கு பழுதடைந்து, எரியாமல் காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்கை சரி செய்ய வேண்டும்.

-பார்வதி அம்மாள், கணபதிபுரம்.

மின்கம்பத்தை மாற்ற வேண்டும்

நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் இருந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு செல்லும் சாைல உள்ளது. இந்த சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.எஸ்.ராஜன், வைத்தியநாதபுரம், நாகர்கோவில்.

சாலை சீரமைக்கப்படுமா?

நாகர்கோவில், டபிள்யு.சி.சி. கல்லூரி அருகில் சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகனத்தில் செல்லும் மாணவிகள் விபத்துக்குள்ளாகும் அபாயமும் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தனுஷ் குமார், இடலாக்குடி.

சேதமடைந்த மின்கம்பம்

குழித்துறை கழுவன்திட்டை சந்திப்பில் இருந்து ஞாறான்விளைக்கு செல்லும் சாலை செல்லும் சாலையில் இலவன்குழி உள்ளது. இந்த பகுதியில் ஒரு திருப்பத்தில் அமைந்துள்ள மின்கம்பத்தின் கீழ் பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தபடி காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வினு, அமலாபுரம்.


Next Story