புகார் பெட்டி
புகார் பெட்டி
சேறும் சகதியுமான சாலை
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் முத்துகிருஷ்ணபேரி காமராஜ் நகர் மாடசாமி கோவில் தெருவில் புதிய சாலை அமைப்பதற்காக சரள் மண் கொட்டப்பட்டது. பின்னர் சாலை அமைக்கும் பணி பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டது. தற்போது சாலையில் மழைநீர், கழிவுநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே புதிய சாலை அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்றவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-அரி, முத்துகிருஷ்ணபேரி.
புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்படுமா?
கடையம் யூனியன் முதலியார்பட்டி ரெயில்வே கேட் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேதமடைந்த வகுப்பறை கட்டிடத்தை இடித்து அகற்றினர். பின்னர் அங்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்படவில்லை. இதனால் சில வகுப்பு மாணவர்கள், மரத்தடியில் அமர்ந்து பாடம் கற்கின்றனர். எனவே புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?
-அம்ஜத், முதலியார்பட்டி.
வீடுகளின் அருகில் தேங்கிய கழிவுநீர்
செங்கோட்டை தாலுகா கற்குடி கிராமத்தில் வாறுகால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பின்னர் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால், வீடுகளின் அருகில் கழிவுநீர் குளம் போன்று தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகால் அமைக்கும் பணிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-ராம்தாஸ், கற்குடி.
நூலகத்துக்கு மின்வசதி அவசியம்
கடையம் அருகே மந்தியூரில் அரசு நூலகம் கடந்த 2006-ம் ஆண்டு கட்டப்பட்டு திறக்கப்பட்டது. ஆனால் நூலகத்துக்கு இன்னும் மின்வசதி செய்து தரப்படவில்லை. இதனால் மாலையில் புத்தகங்களை படிக்க முடியாமல் வாசகர்கள் சிரமப்படுகின்றனர். எனவே நூலகத்துக்கு மின்வசதி கிடைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
-பசுங்கிளி, மந்தியூர்.
அங்கன்வாடி மையத்துக்கு கட்டிடம் தேவை
வாசுதேவநல்லூர் யூனியன் ராமநாதபுரத்தில் அங்கன்வாடி மையம் சேதமடைந்ததால் அதனை இடித்து அகற்றினர். தொடர்ந்து அங்குள்ள பழைய கட்டிடத்தில் வாடகைக்கு தற்காலிகமாக அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. எனவே அங்கன்வாடி மையத்துக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-ஜோதிலிங்கம், ராமநாதபுரம்.
கால்நடை டாக்டர் நியமிக்க வேண்டும்
வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் கிராமத்தில் புதிதாக அரசு கால்நடை ஆஸ்பத்திரி கட்டி திறக்கப்பட்டது. எனினும் அங்கு டாக்டர் நியமிக்கப்படாததால் பொதுமக்கள் தங்களது கால்நடைகளை சிகிச்சைக்காக வெளியூர்களுக்கு அழைத்து செல்லும் நிலை உள்ளது. எனவே கால்நடை ஆஸ்பத்திரிக்கு டாக்டரை நியமிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மூர்த்தி, கீழக்கலங்கல்.