புகார் பெட்டி
புகார் பெட்டி
மயானத்தில் குவிந்த குப்பைகள்
தென்காசி அருகே மேலகரம் சிற்றாற்றின் கரையில் உள்ள மயானத்தின் அருகில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் மயானம் முழுவதும் குப்பைக்கூளமாக காட்சி அளிக்கிறது. மேலும் மயானத்தில் இறுதிச்சடங்கு நடத்துவதற்கும் சிரமமாக உள்ளது. எனவே குப்பைகளை முறையாக அகற்றி, மயானத்தை தூய்மையாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.
-ஜெயக்குமார், மேலகரம்.
பஸ் நிலையத்தில் மழைநீர் ஒழுகும் மேற்கூரை
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பஸ் நிலைய கட்டிடத்தின் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை உடைந்த நிலையில் உள்ளது. இதனால் மழை பெய்யும்போது தண்ணீர் ஒழுகுவதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த பஸ் நிலைய மேற்கூரையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-தமிழ்குமரன், அரியப்பபுரம்.
சேதமடைந்த வாறுகால்
பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் பஞ்சாயத்து மாடியனூர் மெயின் ரோட்டில் தனியார் வங்கி ஏ.டி.எம். முன்புள்ள வாறுகாலுக்குள் பஸ் இறங்கியதால் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்து நிகழும் அபாயமும் உள்ளது. எனவே சேதமடைந்த வாறுகாலை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-பாலசுந்தர், மாடியனூர்.
இருள் சூழ்ந்த பஸ் நிறுத்தம்
கீழ ஆம்பூர் ரெயில்வே கேட் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள தெருவிளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் அப்பகுதியில் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.
சுகாதாரக்கேடு
தென்காசி தாலுகா முத்துமாலைபுரம் தெற்கு தெருவில் வாறுகால் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வாறுகால் அமைத்து கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-இளங்கோ, முத்துமாலைபுரம்.