புகார் பெட்டி
புகார் பெட்டி
சீரமைக்கப்பட்டது
சகாயநகர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆதித்தபுரத்தில் உள்ள தெருக்களில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு மின்கம்பத்தில் உள்ள விளக்கின் சுவிட்சு பெட்டி சேதமடைந்து காணப்பட்டது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய சுவிட்சு பெட்டி வைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
செடிகள் அகற்றப்படுமா?
கருங்கலில் இருந்து பெருமாங்குழிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் கருங்கல் பிரிவு பட்டணங்கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் முறையாக பராமரிக்காததால் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், கால்வாயில் தண்ணீர் வடிந்தோட முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாயை ஆக்கிரமித்துள்ள புதர்களை அகற்றி தண்ணீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுனில்குமார், கருங்கல்.
வாகன ஓட்டிகள் அவதி
தக்கலை அருகே சாரோட்டில் இருந்து பத்மநாபபுரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் ஏராளமான குடியிருப்புகள், விவசாய நிலங்கள் உள்ளன. இந்த பகுதியில் நுள்ளிகுளம் அருகில் சாலையோரம் உணவு கழிவுகள் உள்ளிட்டவற்றை இரவு நேரம் சிலர் கொட்டிச் செல்கின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், அவற்றை நாய்கள் தூக்கி வந்து சாலையில் போடுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் கொட்டப்படுகின்ற உணவு கழிவுகளை அகற்றுவதுடன், அவற்றை கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், நுள்ளிகுளம்.
நோய் பரவும் அபாயம்
பத்மநாபபுரம் அருகே மங்கலம் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இதன் எதிரே அமைந்துள்ள சாலையோரத்தில் சிலர் கோழி கழிவுகளை கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கோழிக்கழிவுகளை அகற்றுவதுடன் அங்கு கொட்டுபவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவகுமார், மங்கலம்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஆண்டித்தோப்பில் மண்ணடிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மாமூடு பகுதியில் தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் வழியாக விவசாயிகள், பள்ளி மாணவ-மாணவிகள் வாகன ஓட்டிகள் மண்ணடிக்கு சென்று வருகின்றனர். தற்போது இந்த தரைப்பாலம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் விவசாயிகள், பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, சேதமடைந்த பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலத்தை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.
மாசடையும் தண்ணீர்
தேரேகால்புதூர் ஊராட்சிக்குட்பட்ட புரவுசேரி கிராமத்தில் சாலையோரம் விவசாய பாசன கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் சிலர் ஓட்டல் கழிவுநீரை கொட்டி வருகின்றனர். இதனால், கால்வாயில் செல்லும் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும், இந்த தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்தினால் பயிர்கள் நாசமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாசன கால்வாயில் ஓட்டல் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜீவா, தேரேகால்புதூர்.