புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:17:19+05:30)

புகார் பெட்டி

கன்னியாகுமரி

விபத்து அபாயம்

சந்தையடியில் இருந்து ஈச்சன்விளை செல்லும் சாலையில் அரசு உயர்நிலைப்பள்ளியும், அதன் நுழைவுவாயில் அருகில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் வேகத்தடையில் செல்லாமல் அதன் இருபுறங்களிலும் உள்ள இடைவெளி வழியாக செல்கின்றனர். இதனால், மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் நலன்கருதி வேகத்தடையை பள்ளியின் சுவர் வரைக்கும் நீட்டிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

மின்விளக்கு அமைக்கப்படுமா?

மேலமணக்குடி-கீழமணக்குடியை இணைக்கும் வகையில் பழையாற்றின் மீது மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மீது மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தூண்களில் வாகன ஓட்டிகள் வசதிக்காக மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. தற்போது இந்த மின்விளக்குகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த மின்விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-உதயகுமார், கன்னியாகுமரி.

சேதமடைந்த அலங்கார தரைக்கற்கள்

குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட கடைதெருவில் கடந்த ஆண்டு அலங்கார தரைக்கற்கள் பதிக்கப்பட்டன. கடந்த மழையின் போது சாலையில் பதிக்கப்பட்டுள்ள அலங்கார தரைக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்தன. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த அலங்கார தரைக்கற்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அபுதாய்ரு, குளச்சல்.

பஸ் இயக்கப்படுமா?

புகழ்பெற்ற சுற்றுலா தலமான சிதறால் மலை கோவிலில்இருந்து கன்னியாகுமரிக்கு தினமும் காலை, மாலை என இரண்டு வேளைகளில் ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதனால், கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அந்த பஸ் மூலம் சிதறால் மலைக்கோவிலுக்கு வந்து பார்வையிட்டு சென்றனர். கடந்த 4 ஆண்டுகளாக அந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால், சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி அந்த பகுதி மக்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?.

-ஜாஸ்பர் ஜெபசிங், துண்டத்தாறாவிளை.

நடவடிக்கை ேதவை

நாகர்கோவில் மாநகராட்சியில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு பகுதியில் எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த சந்திப்பு பகுதியில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை குழாயின் இரும்பு மூடி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் சேதமடைய வாய்ப்புகள் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பாதாள சாக்கடை குழாய் மூடியை அகற்றி விட்டு புதிய மூடியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தனுஷ், இடலாக்குடி

தொற்றுநோய் பரவும் அபாயம்

கல்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொல்லன்விளையில் ஏராளமான வீடுகள் உள்ளன. சில வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் தெருக்களில் பாய்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் இந்த கழிவுநீர் அருகில் ஓடும் வள்ளியாற்றில் கலக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோலப்பன், கொல்லன்விளை.

வாகன ஓட்டிகள் அவதி

நாகர்கோவில் இந்திராகாந்தி சிலை சந்திப்பு பகுதியில் சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெனிஷ்தேவ், இந்திராகாந்தி சிலை சந்திப்பு, நாகர்கோவில்.


Next Story