தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

நாய்கள் தொல்லை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுற்றுப்புற பகுதிகளில் நாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பெண்கள், குழந்தைகள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் நாய்களால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வபாண்டியன், கமுதி, ராமநாதபுரம்

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

ராமநாதபுரம் நகர் பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் கூட்டம் அதிகரிப்பால் பொதுமக்கள் காத்திருந்து பயணிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். எனவே நகர் பகுதியில் இயங்கும் டவுன் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்வர்தீன், ராமநாதபுரம், ராமநாதபுரம்

பொதுமக்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகருக்குட்பட்ட பகுதியில் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இரவில் சரியான தூக்கமின்றி மாணவர்கள், கர்ப்பிணிகள், முதியோர்கள் அவதியடையும் சூழல் நிலவுகிறது. எனவே இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

கோபிநாத், பரமக்குடி, ராமநாதபுரம்

போக்குவரத்து இடையூறு

ராமேசுவரம் கோவிலில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையில் வாகனஓட்டிகள் தங்கள் இருசக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பிற வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சீரான போக்குவரத்திற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேதுராமன், ராமேசுவரம்.

சேதமடைந்த உறைகிணறு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நென்மேனி பகுதியில் வைகை ஆற்றுப்படுகை அருகே உள்ள குடிநீர் சேமித்து வைக்கும் உறைகிணறு சேதமடைந்து அதன் சுவர் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அதில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் சிலர் தண்ணீரை மாசுப்படுத்தும் செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய உறைகிணறு அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மகேந்திரன், நென்மேனி, ராமநாதபுரம்

செய்தி எதிரொலி

சிவகங்கை மாவட்டம் கல்லலில் இருந்து புரண்டி வழியாக கள்ளிப்பட்டு வரை இயக்கப்பட்ட பஸ் நிறுத்தப்பட்டது. இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியிடப்பட்டது. தற்போது அதன் பயனாக கல்லல் முதல் கள்ளிப்பட்டு வரை பஸ் போக்குவரத்து இயக்கப்படுகிறது. எனவே இந்த செய்தியை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

சுவாமிநாதன், கல்லல், சிவகங்கை.

நிழற்குடை அமைத்து தருவார்களா?

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் அரண்மனை சிறுவயல் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் இங்குவரும் மாணவர்கள், முதியோர், கர்ப்பிணிகள் சிரமப்படும் நிலை ஏற்படுகிறது. எனவே பயணிகள் நலன் கருதி இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரவணன், அரண்மனை சிறுவயல், சிவகங்கை

சேதமடைந்த சாலை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 8-வது வார்டு தெருவில் கழிவுநீர் கால்வாய், சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலையின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து வாகனஓட்டிகள் பயணிக்க லாயக்கற்ற நிலையில் காட்சியளிக்கிறது. மேலும் சாலையில் நடந்து செல்பவர்களின் கால்களை சாலை பதம்பார்க்கின்றது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

முகமதுஜிப்ரி, காரைக்குடி, சிவகங்கை

ஆபத்தான மின்கம்பம்

சிவகங்கை மேலூர் ரோடு காமராஜர் காலனி அருகில் மெயின்சாலையில் மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது.மின்கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் ஆபத்தாக காட்சியளிக்கிறது.இதனால் மழைகாலங்களில் மின்கம்பம் அருகில் செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலகிருஷ்ணன், சிவகங்கை.

கண்மாய் ஆக்கிரமிப்பு

சிவகங்கை மாவட்டம் ஆலம்பட்டு பஞ்சாயத்து கொடுங்குளம் கிராமத்தில் செங்குளம் கண்மாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் கண்மாயில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத சூழல் நிலவுகிறது. மேலும் விவசாயம், அன்றாட தேவைகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதற்கு தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துசாமி, கொடுங்குளம், சிவகங்கை.


Next Story