தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பள்ளத்தை சீரமைக்க வேண்டும்
சிவகங்கை மாவட்டம் கரிசல்பட்டியிலிருந்து தேனம்பட்டி வரை செல்லும் சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இவ்வழியாக செல்லும் மோட்டார் சைக்கிள் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது. எனவே சாலையோர பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்துல் ரசீது, எஸ்.புதூர்.
தெருநாய்கள் அட்டகாசம்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இந்த நாய்கள் சாலையில் செல்லும் வாகனங்களின் மீது மோதுவதால் அவ்வப்போது சிறு சிறு விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. எனவே இந்த நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாறன், இளையான்குடி.
சுகாதார சீர்கேடு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை 3-வது வார்டு சென்மேரிஸ் உயர்நிலைப் பள்ளி அருகில் அப்பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை கொட்டி பிறகு மொத்தமாக நகராட்சி வண்டிகளில் அள்ளுகிறார்கள். அந்தப் பகுதி கடைகள் அதிகம் உள்ள பகுதியாகவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்லும் பகுதியாகவும் உள்ளதால் இந்த குப்பைகளில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஜீஸ்கான், தேவகோட்டை.
கால்நடைகள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இந்த கால்நடைகளால் விபத்து அபாயம் உள்ளது. எனவே சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிவதை தடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருப்பத்தூர்.
ஆக்கிரமிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல கண்மாய்களில் கருவேல மரங்களால் ஆக்கிரமிப்பு நிறைந்துள்ளது. இதனால் கண்மாயில் தண்ணீர் சேமித்து வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே கண்மாய்களில் உள்ள கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சிவகங்கை.