புகார் பெட்டி
தென்காசி புகார் பெட்டி
போக்குவரத்துக்கு இடையூறு
பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில் நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் நெல்லை- தென்காசி சாலையின் வடபுறத்தில் இருந்த பயணிகள் நிழற்குடையை சாலை விரிவாக்க பணிகளுக்காக இடித்து அகற்றினர். பின்னர் கட்டிட கழிவுகளை அகற்றாததால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மேலும் அதன் அருகில் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே கட்டிட கழிவுகளை அகற்றி, வாறுகாலை தூர்வாரி கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-மனோ, பாவூர்சத்திரம்.
தீயில் கருகிய மரங்கள்
அம்பை- தென்காசி மெயின் ரோட்டில் ஆம்பூருக்கு கிழக்கு பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் வாழை மரக்கழிவுகளில் சிலர் தீ வைத்து சென்று விடுகின்றனர். இதனால் அங்குள்ள பழமைவாய்ந்த மரங்கள் தீயில் கருகி சேதமடைகின்றன. எனவே இதனை தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
-கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.
காட்சிப்பொருளான சுகாதார வளாகம்
கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து அம்பாநாயகம் நகர் சுகாதார வளாகத்தில் மின்மோட்டார் பழுதடைந்ததால் பல மாதங்களாக பயன்பாடற்று பூட்டியே கிடக்கிறது. எனவே மின்மோட்டார் பழுதை சரிசெய்து, காட்சிப்பொருளான சுகாதார வளாகத்தை மீண்டும் திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அம்ஜத், முதலியார்பட்டி.
பயணிகள் நிழற்கூடம் தேவை
சுரண்டை அண்ணாநகர் பகுதியில் சாலை விரிவாக்கத்தின்போது, அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகில் இருந்த பயணிகள் நிழற்கூடமும், எதிரே இருந்த பயணிகள் நிழற்கூடமும் அகற்றப்பட்டது. பின்னர் அங்கு புதிய பயணிகள் நிழற்கூடங்கள் கட்டப்படாததால் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் நின்றி பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு புதிய பயணிகள் நிழற்கூடங்கள் அமைக்க வேண்டுகிறேன்.
-சுரேஷ், சுரண்டை.
நேரம் தவறி இயக்கப்படும் பஸ்
தென்காசியில் இருந்து அம்பை வழியாக பாபநாசத்திற்கு இரவு 9.15 மணிக்கு இயக்கப்பட்டு வந்த வழித்தட எண் 133-இ பஸ் கடந்த சில நாட்களாக இரவு 8.15 மணிக்கே புறப்பட்டு செல்கிறது. இதனால் தென்காசியில் இருந்து இரவு 9 மணிக்கு மேல் வேலை முடித்து அம்பை மற்றும் பாபநாசம் செல்லும் பொதுமக்களும் கடும் அவதியடைந்துள்ளனர். இரவு 9.45 மணிக்குத்தான் அடுத்த பஸ் உள்ளது. இதனால் குறிப்பாக பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். போக்குவரத்து நிர்வாகம் பஸ் காலஅட்டவணையை மாற்றியமைக்க கேட்டுக்கொள்கிறேன்.
-மாரியப்பன், கடையம்
சாய்ந்த மின்கம்பம்
கடையம் யூனியன் முதலியார்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையோரம் உள்ள மின்கம்பம் கடந்த சில மாதங்களாக சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் எந்த நேரத்திலும் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.
-திருக்குமரன், கடையம்.