சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்; வியாபாரிகள் மனு


சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்; வியாபாரிகள் மனு
x

சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வியாபாரிகள் மனு கொடுத்தனர்.

தேனி

சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வியாபாரிகள் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் மொத்தம் 229 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் இக்கூட்டத்தின்போது, மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு ஆவின் பாலகம் அமைக்க தலா ரூ.50 ஆயிரம் வீதம் மானிய தொகையை கலெக்டர் வழங்கினார்.

இந்த கூட்டத்தின்போது சுருளி அருவி பகுதியில் சிறுகடைகள் வைத்துள்ள வியாபாரிகள் திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "சுருளி அருவி பகுதியில் சுமார் 100 வியாபாரிகள் சிறு கடைகள் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால், வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே, சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளித்து, வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

போலி சான்றிதழ்

தேவதானப்பட்டியை சேர்ந்த முருகன் என்பவர் கொடுத்த மனுவில், "பெரியகுளம் தாலுகாவில் உள்ள ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் போலியான கல்வி சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந்துள்ளார். அத்துடன் விதிகளை மீறி தொண்டு நிறுவன பதவியிலும் உள்ளார். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.


Next Story