தரமற்ற சர்க்கரை வினியோகம் செய்ததாக புகார்
பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற சர்க்கரை வினியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், ரேஷன்கடைகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
தரமற்ற சர்க்கரை வினியோகம்
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில், நேற்று முன்தினம் முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ரேஷன்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்படுகிறது.
இந்தநிலையில் பெரியகுளம் வடகரை பகுதியில் செயல்படுகிற ஒரு ரேஷன் கடையில், பொங்கல் சிறப்பு தொகுப்பில் உள்ள சர்க்கரை தரமற்ற நிலையில் நிறம் மாறி இருப்பதாக அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்தனர்.
இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் இரவு கலெக்டர் முரளிதரன், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு மூட்டைகளில் இருந்த சர்க்கரையை சோதனை செய்தார். அப்போது சர்க்கரையின் நிறம் மாறி இருப்பது தெரியவந்தது. அந்த சர்க்கரையை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக வேறு சர்க்கரையை வினியோகம் செய்ய வேண்டும் என்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது பெரியகுளம் தாசில்தார் காதர்ஷெரிப், மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி, பெரியகுளம் வட்ட வழங்கல் அலுவலர் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
கலெக்டர் அறிவுறுத்தல்
இதேபோல் தேனி, கோடாங்கிபட்டி, லட்சுமிபுரம், சருத்துப்பட்டி ஆகிய இடங்களில் பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூ.1,000 வழங்கும் பணியை கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார். பரிசு தொகுப்பில் வழங்கப்படும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றின் தரத்தை அவர் ஆய்வு செய்தார்.
அப்போது அவர், பரிசு தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றில் குறைபாடுகள் இருந்தால் அதை மக்களுக்கு வழங்கக்கூடாது என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து அதை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.