தங்கத்துக்கு பதிலாக செம்பு கட்டிகள் கொடுத்து மோசடி புகார்: நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேரிடம் விசாரணை


தங்கத்துக்கு பதிலாக செம்பு கட்டிகள் கொடுத்து மோசடி புகார்: நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேரிடம் விசாரணை
x

தங்கத்துக்கு பதில் செம்பு கட்டிகள் கொடுத்து மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

செம்பு கட்டிகள்

மேற்கு வங்காள மாநிலம் ஜாசர் ஹூக்ளி பகுதியை சேர்ந்தவர் குலாம் ஆம்பியா. இவருடைய மகன் ஜுல்விர்கான் (வயது 40). இவர் சேலம் செவ்வாய்பேட்டை மாதவராயன் தெருவில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஷேண்டோ வர்கீஸ் (40), விஷ்ணு (30), நெல்சன் (29) ஆகிய 3 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் ஒரு கிலோ தங்க நகை கொண்டு வந்து உள்ளோம். அதற்கு பதில் தங்க கட்டிகள் வேண்டும் என்று கூறி உள்ளனர்.

இதையடுத்து நகைகளை பெற்றுக்கொண்ட அவர், தங்க கட்டிகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதை பெற்றுக்கொண்ட கேரள வாலிபர்கள் வேறு ஒரு கடையில் கொடுத்து பரிசோதனை செய்ததாகவும், அப்போது தங்க முலாம் பூசப்பட்ட செம்பு கட்டிகள் இருப்பதாகவும் கூறி ஜுல்விர்கானிடம் வாக்குவாதம் செய்தனர்.

தலைமறைவு

இந்த நிலையில் தங்க நகைகள் பெற்றுக்கொண்டு, செம்பு கட்டிகள் கொடுத்து மோசடி செய்த ஜுல்விர்கான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஷேண்டோ வர்கீஸ் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் ஜுல்விர்கான் தலைமறைவானார். இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த ஜுல்விர்கான், அவரது கூட்டாளியான கோவை செல்வபுரத்தை சேர்ந்த சக்திவேல் உள்ளிட்ட 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறும் போது,' தங்க நகைகளுக்கு பதில் செம்பு கட்டிகள் கொடுத்து ஏமாற்றப்பட்டதாக கேரளாவை சேர்ந்த ஷேண்டோ வர்கீஸ் உள்பட 3 பேர் கூறுகின்றனர். தற்போது ஜுல்விர்கான், இவருடைய கூட்டாளி சக்திவேல் உள்பட 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடிவில் தான் மோசடி செய்தது யார்? என்பது தெரிய வரும்' என்றார்கள்.


Next Story