பணி நியமனத்தில் முறைகேடு புகார்:சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசு குழு விசாரணை தொடங்கியது


பணி நியமனத்தில் முறைகேடு புகார்:சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசு குழு விசாரணை தொடங்கியது
x

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமனத்தில் முறைகேடு தொடர்பாக உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிசாமி தலைமையிலான குழுவினர் நேற்று நேரில் வந்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

சேலம்

கருப்பூர்,

முறைகேடு புகார்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு உள்பட பல்வேறு புகார்கள் தமிழக அரசுக்கு வந்தன. குறிப்பாக உடற்கல்வி இயக்குனர் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று புகார் கூறப்பட்டது.

மேலும் பல்கலைக்கழக நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் ஆகிய பதவிகள் இடஒதுக்கீடு ஆணைப்படி நியமிக்கப்படவில்லை என்றும், தமிழ்த்துறை தலைவர் பெரியசாமி, சீனியர்கள் பலர் இருக்கும் நிலையில் முைறகேடாக நியமிக்கப்பட்டதாகவும் சர்ச்சை ஏற்பட்டது. தேசிய தர நிர்ணயக்குழு ஆய்வுக்கான செலவு கணக்குக்கு போலி பில் வழங்கி ரூ.1 கோடியே 30 லட்சத்தை பல்கலைக்கழக நூலகர் முறைகேடு செய்ததாகவும் புகார் எழுந்தது.

இதேபோல் 450 பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், சுமார் 18 மாணவர்களை பணிப்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளுக்கு பிறகு மணிக்கணக்கு அடிப்படையில் பணியில் சேர்த்தது உள்பட 13 புகார்கள் கூறப்பட்டன.

அரசு குழு விசாரணை

இதையடுத்து இந்த முறைகேடு புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்திட, உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிசாமி, உயர்கல்வித்துறை இணைச்செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் உள்பட 5 பேர் கொண்ட குழுவை மாநில அரசு நியமித்து இருந்தது.

இந்த குழுவினர் நேற்று காலை சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வந்தனர். அவர்கள் கூட்ட அரங்கில் பல்கலைக்கழக கோப்புகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 2 நாட்கள் விசாரணை நடத்தும் இந்த குழுவினர் அடுத்த இரு மாதங்களுக்குள் தங்கள் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிப்பார்கள் என்று பல்கலைகக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பணி நியமனத்தில் முறைகேடு தொடர்பாக உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிசாமி தலைமையிலான குழுவினர் நேரில் விசாரணை நடத்தியதால் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.


Next Story