பிரசவம் பார்த்த பெண்ணுக்கு அனுமதியின்றி குடும்பக்கட்டுப்பாடு செய்ததாக புகார்
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்த்த பெண்ணுக்கு அனுமதியின்றி குடும்பக்கட்டுப்பாடு செய்ததாக டாக்டர்கள் மீது புகார் அளிக்கப்பட்ட சம்பவம் குறித்து டீன் விளக்கம் அளித்தார்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்த்த பெண்ணுக்கு அனுமதியின்றி குடும்பக்கட்டுப்பாடு செய்ததாக டாக்டர்கள் மீது புகார் அளிக்கப்பட்ட சம்பவம் குறித்து டீன் விளக்கம் அளித்தார்.
மதுரை அரசு ஆஸ்பத்திரி
தென் மாவட்டத்தில் மிக முக்கிய ஆஸ்பத்திரியாக மதுரை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு மகப்பேறு சிகிச்சைக்கென தனி வளாகம் 6 மாடி கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில், மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள முகம்மதியாபுரத்தைச் சேர்ந்தவர் அப்சர் உசேன். இவருடைய மனைவி ஆஷிகா பானு. இவர் 2-வது பிரசவத்துக்காக, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று அதிகாலை அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், டாக்டர்கள் ஆஷிகா பானுவிடம் அனுமதி கேட்காமலேயே அவருக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அனுமதியின்றி குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேலுவிடம் புகார் தெரிவித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
இதுகுறித்து டீன் ரத்தினவேல், பெண்ணின் குடும்பத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி குடும்பக்கட்டுப்பாடு அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது ஏன் என்பது குறித்து விளக்கினார். இதைத்தொடர்ந்து உறவினர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
டீன் விளக்கம்
இது தொடர்பாக டீன் ரத்தினவேலுவிடம் கேட்டபோது, "பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட ஆஷிகாபானுவின் கருக்குழாயில் நீர்கோர்த்து இருந்ததால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. எனவே டாக்டர்கள் உடனடியாக ஆலோசித்து இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டனர். இதில் தகவல் தொடர்பில்தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொண்டால் தான் குழந்தையை காப்பாற்ற முடியும் என்ற சூழலில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை மூலம் தாய், குழந்தை ஆகியோர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
பொதுவாக 2-வது பிரசவத்திற்கு வரும் பெண்களுக்கு அறுவை சிகிச்சைக்கு முன்னரே, குடும்ப கட்டுப்பாடு செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. அதற்கான விதிமுறைகளை டாக்டர்கள் கடைபிடித்து வருகின்றனர். பெண்களிடம் அனுமதி பெற்ற பின்னர்தான், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது" என்றார்.