நகராட்சி கூட்டத்தில் துணை தலைவர் பரபரப்பு புகார்
களக்காட்டில் வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் விட்டதில் முறைகேடு நடைபெற்றதாக நகராட்சி கூட்டத்தில் துணை தலைவர் பரபரப்பு புகார் கூறினார்
களக்காடு:
களக்காடு நகராட்சி கூட்டம் தலைவர் சாந்தி சுபாஷ் தலைமையில் நடந்தது. துணை தலைவர் பி.சி.ராஜன், ஆணையாளர் (பொ) கண்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், மேற்பார்வையாளர்கள் சண்முகம், வேலு மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் துணை தலைவர் ராஜன் பேசுகையில், ரூ.1 கோடியே 92 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள டெண்டர் விட்டதில் முறைகேடு நடந்துள்ளது. இதனால் அரசுக்கு 10 சதவீத நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆணையாளரும், பொறியாளரும் தான் பொறுப்பு. டெண்டரை ரத்து செய்து விட்டு, மறு டெண்டர் விட வேண்டும், என்றார்.
கவுன்சிலர் ஆயிஷா கூறுகையில், களக்காடு பகுதியில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும், என்றார்.
கவுன்சிலர் சித்ரா பேசும்போது, எனது வார்டில் சாக்கடை ஒரு மாதமாக அள்ளவில்லை. நீங்கள் வந்து பார்த்து விட்டு சென்றீர்கள். ஆனால் பணிகள் நடக்கவில்லை, என்றார்.
இசக்கியம்மாள் கூறுகையில், எனது வார்டில் கழிவறை கட்டிடம் பயன் இல்லாமல் கிடக்கிறது, என்றார்.