முறையான ஆவணங்கள் வாங்காமல் சாலையோரத்தில் சிம்கார்டு விற்கப்படுவதாக புகார்


முறையான ஆவணங்கள் வாங்காமல் சாலையோரத்தில் சிம்கார்டு விற்கப்படுவதாக புகார்
x

திண்டுக்கல்லில் முறையான ஆவணங்கள் வாங்காமல் சாலையோரத்தில் சிம்கார்டுகள் விற்கப்படுவதாக செல்போன் விற்பனையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், மாவட்ட மொபைல் போன் ரீடெய்லர் சங்கத்தினர் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதால் சிம்கார்டு உபயோகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் 3 சிம்கார்டு நிறுவனத்தினர் திண்டுக்கல் மாவட்டத்தில் சாலையோரத்தில் குடை அமைத்து இலவசமாகவும், குறைந்த விலையிலும் சிம்கார்டு விற்பனை செய்கின்றனர்.

அந்த சிம்கார்டுகளை வாங்கும் மக்கள் ஒரே ஒரு மாதம் மட்டுமே பயன்படுத்திவிட்டு, பாதுகாப்பற்ற முறையில் வீசி வீடுகின்றனர். அதை வேறுசிலர் எடுத்து சென்று தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. அதனால் குற்றங்கள் அதிகரிக்கலாம். மேலும் வடமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டைகளை வாங்காமலும், முறையான ஆவணங்கள் பெறாமலும் சிம்கார்டு விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பாக 3 நிறுவனங்களின் மாவட்ட வினியோகஸ்தர்களிடம் எங்களுடைய சங்கத்தின் சார்பில் மனு கொடுத்தோம். சாலையோரத்தில் சிம்கார்டு விற்பதால் ரீசார்ஜ், சிம்கார்டு விற்பனை செய்யும் சிறு கடைகளிலும் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. எனவே சாலையோரத்தில் சிம்கார்டுகளை விற்பனை செய்வதை தடுத்து, கடைகளில் அரசின் விதிப்படி விற்பனை செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.



Next Story