கைதான இயக்குனர் மீது புகார்கள் குவிகின்றன


கைதான இயக்குனர் மீது புகார்கள் குவிகின்றன
x

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பெண்களை சீரழித்ததாக கைதான இயக்குனர் மீது ஏராளமான புகார்கள்குவிகின்றன.

சேலம்

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பெண்களை சீரழித்ததாக கைதான இயக்குனர் மீது ஏராளமான புகார்கள்குவிகின்றன.

ஆபாச படம்

சேலம் மாவட்டம் எடப்பாடி வீரப்பன்பாளையத்தை சேர்ந்தவர் வேல்சத்திரியன் (வயது 38). சினிமா பட இயக்குனர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'நோ' என்ற பெயரில் புதிதாக சினிமா படம் எடுப்பதாகவும், அதற்கு துணை நடிகைகள் தேவை என்றும் சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தினார்.

இதை நம்பி ஏராளமான பெண்கள் அவரை அணுகி உள்ளனர். அப்போது அவர் இளம்பெண்களிடம் சினிமா ஆசையை தூண்டி விட்டு அவர்களை ஆபாசமாக படம் எடுத்து சீரழிப்பதாக இரும்பாலையை சேர்ந்த கனகா என்பவர் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

2 பேர் கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இயக்குனர் வேல்சத்திரியன், அவருடைய பெண் உதவியாளரான ராஜபாளையத்தை சேர்ந்த ஜெயஜோதி (23) ஆகிய 2 பேரை கைதுசெய்தனர். இந்த நிலையில் இயக்குனர் வேல்சத்திரியன் மீது ஏராளமான பெண்கள் செல்போனில் தொடர்பு கொண்டு போலீசில் புகார் கொடுத்து வருகின்றனர். புகார்கள் குவிவதால், அவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விரிவாக விசாரிக்க நேரில் வருமாறு அழைத்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

வைரலாகி வரும் ஆடியோ

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தாயாரிடம் இயக்குனர் வேல்சத்திரியன் பேசுவது போன்ற ஒரு ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில் உங்க மகளை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவளை நல்ல இடத்துக்கு கொண்டு போகனும். நீங்க தப்பா நினைக்காதீங்க. அவளை ரெடி பண்ணணும். நானே ரெடி பண்ணவா என கேட்கிறார்.

அதற்கு இளம் பெண்ணின் தாயார், நீங்களே ரெடி பண்ணுங்க. உங்க கிட்ட ஒப்படைச்சாச்சு என்கிறார். தொடர்ந்து இயக்குனர் ரெடி பண்ணும் போது டச்சப் உள்பட எல்லாமே இருக்கும், அவளிடம் உள்ள பயம் கூச்சத்தை போக்க வேண்டும் என்று கூறுகிறார். இவ்வாறாக அந்த உரையாடல் தொடர்கிறது.

இது தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story