சோளிங்கர் நகராட்சி கூட்டத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வார்டுகளுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்குவதாக புகார்


சோளிங்கர் நகராட்சி கூட்டத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வார்டுகளுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்குவதாக புகார்
x

சோளிங்கர் நகராட்சியில் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் வாடுகளுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்குவதாக புகார் தெரிவித்து, நகராட்சி கூட்டத்தில் இருந்து அ.ம.மு.க., பா.மக. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ராணிப்பேட்டை

சோளிங்கர் நகராட்சியில் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் வாடுகளுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்குவதாக புகார் தெரிவித்து, நகராட்சி கூட்டத்தில் இருந்து அ.ம.மு.க., பா.மக. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நகராட்சி கூட்டம்

சோளிங்கர் நகராட்சி கூட்டம், நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பழனி, நகராட்சி ஆணையர் பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பில் நகராட்சி புதிய அலுவலகம் கட்டவும், நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்வது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

கூட்டத்தில் கோபால், அன்பரசு, லோகேஸ்வரி, அருண் ஆதி, சாரதி உள்ளிட்ட கவுன்சிலர்கள் நகராட்சி மற்றும் தங்கள் வார்டுகளில் செய்யவேண்டிய பணிகள் குறித்து பேசினர். அப்போது நகராட்சிக்கு சொந்தமான கடைகளை மறு குத்தகைக்கு விட்டு உள்ளவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, மீண்டும் கடையை குத்தகைக்கு விட வேண்டும், அய்யனேரி ஊராட்சிக்கு உட்பட்ட பஞ்சகாண்டாபுரத்தில் உள்ள 60 வீடுகளை நகராட்சியுடன் சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். பொன்னையாற்று குடிநீர் வழங்க வேண்டும் என்றனர்.

வெளி நடப்பு

மேலும் அனைத்து தெருக்களுக்கும் சிமெண்டு சாலை, கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும், சிறிய மலை அடிவாரத்தில் பூட்டியே கிடக்கும் பக்தர்கள் தங்கும் விடுதியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். 25- வது வார்டு மலைப்பகுதியில் கால்வாய் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் மழைநீர் வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் கால்வாய் வசதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களின் வார்டுகளுக்கு மட்டும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பல லட்சங்களை ஒதுக்கிக் கொண்டு, பா.ம.க., அ.ம.மு.க., அ.தி.மு.க., சுயேச்சை உறுப்பினர்களுக்கு குறைந்த அளவு நிதி ஒதுக்கீடு செய்வதை கண்டித்தும், குற்ற சம்பளங்களை கண்காணிக்க நகராட்சி முழுவதும் ரூ.32 லட்சம் மதிப்பில் 120 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் ஆளுங்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் வார்டுகளில் மட்டுமே கேமராக்கள் பொருத்தப்பட்டதை கண்டித்தும், நகராட்சிக்கு வரியே செலுத்தாத பத்து வீடுகள் மட்டுமே உள்ள திரவுபதி அம்மன் நகரின் நான்கு தெருக்களுக்கு சுமர் ரூ.75 லட்சத்தில் தார் சாலை அமைக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டதை கண்டித்தும் பா.ம.க. கவுன்சிலர் சாரதி, கோமளா, அ.ம.மு.க. கவுன்சிலர் சுரேஷ், ராதிகா, காஞ்சனா, ராதா மற்றும் சுயேச்சை கவுன்சிலர் ஆஞ்சநேயன் ஆகியோர் வெளி நடப்பு செய்தனர்.

உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக செய்து தரப்படும் என தலைவர் தமிழ்செல்வி அசோகன் உறுதி அளித்தார். மேலும் சோளிங்கர் நகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை செய்து தமிழகத்திலேயே முன்மாதிரியான நகராட்சியாக மாற்ற நகர மன்ற அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வடிவேல், இளநிலை உதவியாளர் எபினேசன், ஜெயராமன் நகராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story