ரூ.1,257 கோடியில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது:ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்


ரூ.1,257 கோடியில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது:ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
x
தினத்தந்தி 6 May 2023 12:45 AM IST (Updated: 6 May 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் ரூ.1,257 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது என்றும், ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் ரூ.1,257 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது என்றும், ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

கலந்தாய்வு கூட்டம்

குமரி மாவட்ட பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, மாநகராட்சி, நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலகங்களில் பணிபுரியும் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கூட்டரங்கில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு அனைத்துத்துறை பொறியாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

25-ந் தேதிக்குள்...

குமரி மாவட்டத்தில் ரூ.1,257 கோடிக்கான வளர்ச்சி பணி, சாலை, கட்டிடங்கள், அடிப்படை கட்டமைப்பு வசதி போன்றவை நடைபெற்று வருகிறது. இந்த வேலைகளின் முன்னேற்றம் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினோம்.

ஒவ்வொரு பணியும் குறிப்பிட்ட காலத்துக்குள் தரமாக செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். அதுபோன்று ஆக்கிரமிப்பு, குறிப்பாக நீராதாரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் விவாதிக்கப்பட்டு தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மழைக்காலம் தொடங்குவதற்குள் நீர்வள ஆதார அமைப்பு மூலம் நடைபெறுகின்ற பணிகளை துரிதப்படுத்தி இந்த மாதம் 25-ந் தேதிக்குள் அத்தனை வேலைகளையும் முடிக்க வேண்டும் என்ற அறிவுரையையும் வழங்கி இருக்கிறோம்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

நீர்நிலை ஆக்கிரமிப்பு போன்ற விஷயங்களில் ஒரு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு முன்னேற்றத்தை காட்டியுள்ளோம். இந்த ஆண்டு அதற்கு மிக முக்கியத்துவத்தை கொடுத்து எந்தெந்த இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதோ அவை அத்தனையையும் ஜூன், ஜூலை மாதத்துக்குள் அகற்றப்படும் என்ற உத்தரவாதத்தை அதிகாரிகள் தந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக நாங்களும் அதனை கண்காணித்து ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுப்போம்.

நீர்நிலை குமரி என்று ஒரு இணையதளத்தை தொடங்கியுள்ளோம். அதில் ஒவ்வொரு குளத்தைப் பற்றிய தரவுகளை போட்டுள்ளோம். எந்த கால்வாய் எங்கிருந்து புறப்பட்டு எங்கு வந்து சேர்கிறது என்ற விவரங்களையும் இந்த இணையதளத்தில் சேர்ப்பதற்கான பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம். குடிநீர் வடிகால் வாரியம் 8 ஆண்டுகள், 10 ஆண்டுகளாக பணிகளை முடிக்காமல் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளில் நாங்கள் விரைவு படுத்தியதன் விளைவாக பணிகள் முடிவடையக்கூடிய தருவாயில் உள்ளது. இந்த பணிகள் முடிவடைந்தால் குடிநீர் பிரச்சினை இருக்காது. ஒரு சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு இருந்தாலும் அது சரிசெய்யும் வகையில்தான் உள்ளது. புதிய குடிநீர் திட்டங்களும் தேவையின் அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

குளங்கள் தூர்வாரப்படும்

கோர்ட்டு வழக்குகளைத்தவிர மற்ற ஆக்கிரமிப்புகளை எடுத்து விட்டோம் என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இடையூறு இல்லாத ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதிகாரிகளிடம் கூறியிருக்கிறோம். எனவே எந்தெந்த பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருக்கிறதோ அதையெல்லாம் எடுத்து விட்டோம். குமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை குளங்கள் தற்போது 2040 உள்ளன. சுமார் 800 குளங்கள் பஞ்சாயத்து போன்றவற்றுக்கு சொந்தமான குளங்கள் உள்ளன. இவ்வளவு குளங்களையும் ஒரே நேரத்தில் தூர்வாருவது என்பது சவாலான பணி. எங்கெங்கு விவசாயிகள் தூர்வார முன்வருகிறார்களோ அவற்றுக்கு கலெக்டர் அனுமதி அளித்து வருகிறார். அது ஒரு பக்கம் நடந்து வருகிறது. ஒருசில வெளி அமைப்புகள் அதாவது நீராதாரங்களை மேம்படுத்தும் அமைப்புகளிடம் தூர்வாருவதற்கு பேசி வருகிறோம்.

குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள நான்கு வழிச்சாலை பணியின் திட்ட காலம் 2 ஆண்டுகள் ஆகும். ஆனால் நாங்கள் அவர்களிடம் 2 ஆண்டுகள் தரமுடியாது. மாவட்ட நிர்வாகம் எந்தெந்த ஒத்துழைப்பு தரவேண்டுமோ? அதற்கு ஒத்துழைப்பு தருகிறோம். எனவே வேலைகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறோம். அவர்களும் செய்து தருவதாக கூறியிருக்கிறார்கள். இதில் முக்கியப்பணி 57, 58 பாலங்கள் அமைக்க வேண்டியது தான். இந்த திட்டப்பணியில் உள்ள வழக்குகளில் நீதிமன்றத்தின் உத்தரவையும் பெற்று விரைவாக பணிகளை மேற்கொள்ள ஆரம்பத்திலேயே அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story