எழிலூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுமா?


எழிலூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுமா?
x

திருத்துறைப்பூண்டி அருகேஎழிலூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டி அருகே எழிலூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

அரசு உயர்நிலைப்பள்ளி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூர் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டிடம் சமீப காலத்தில் கட்டப்பட்டது. இந்த பள்ளியில் 170 மாணவர்கள் படித்து வருகின்றனர். 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை இந்த பள்ளியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. 9-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியில் அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

சுற்றுச்சுவர்

இந்தப் பள்ளி கட்டிடம் புதிதாக கட்டப்பட்டதால் ஒரு வயல்வெளி பகுதியில் உள்ளது. பள்ளியை சுற்றிலும் வயல்வெளிகளாக உள்ளதால் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளியில் குடிநீர் வசதி, ஆய்வக வசதி கழிவறை வசதி, போதிய அளவில் உள்ளதால் சுற்றுச் சுவர் அமைத்தால் பள்ளி சிறப்பாக இருக்கும் என அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

பாதுகாப்பு

எழிலூர் தண்டாயுதபாணி:

ஏழை எளிய மாணவர்கள் ஏராளமானோர் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். பள்ளியில் ஆசிரியர்களும் சிறந்த கல்வியை வழங்கி வருகின்றனர். மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இந்த பள்ளியில் உள்ளன. ஆனால் பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் இருந்தால் குழந்தைகளுக்கு மேலும் பாதுகாப்பாக இருக்கும். சிறப்பான கல்வியை பாதுகாப்புடன் பெற விரைவில் அரசு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும்.

எழிலூரை சேர்ந்த பட்டுராஜ்:

மாணவ- மாணவிகளுக்கு சிறப்பான கல்வியை போதிக்க வேண்டும். என தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது. ஆனால் எங்கள் ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்துக் கொடுத்தால் பாதுகாப்பான கல்வியை மாணவர்கள் பெறுவார்கள். எனவே பள்ளிக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் இருந்தாலும் கூட சுற்றுச்சூவர் இல்லாதது ஒரு குறையாக உள்ளது. எனவே அரசு உடனடியாக தலையிட்டு பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story