மக்கள் நீதிமன்றத்தில் 1,168 வழக்குகள் சமரச தீர்வு
புதுக்கோட்டையில் மக்கள் நீதிமன்றத்தில் 1,168 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டன. உரியவர்களுக்கு ரூ.13 கோடியே 70 லட்சத்து 29 ஆயிரத்து 369 இழப்பீடு வழங்கப்பட்டன.
மக்கள் நீதிமன்றம்
புதுக்கோட்டையில் கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் தலைமை தாங்கினார்.
கூடுதல் மாவட்ட நீதிபதி வசந்தி, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு கூடுதல் மாவட்ட நீதிபதி பாபுலால், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் (பொறுப்பு) சார்பு நீதிபதி சசிக்குமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் ஸ்ரீநாத், கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ரேவதி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா ஆகிய நீதிபதிகள் கொண்ட 3 அமர்வுகள் மற்றும் தாலுகா நீதிமன்ற அமர்வுகள் 4 என மொத்தம் 7 அமர்வுகள் நடைபெற்றது.
1,168 வழக்குகள் சமரச தீர்வு
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல், குற்றவியல், வாகன விபத்து இழப்பீடு, காசோலை மோசடி, வங்கி வராக்கடன் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் என மொத்தம் 1,168 வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றத்தில் சமரச தீர்வு காணப்பட்டன.
மேலும் உரியவர்களுக்கு ரூ.13 கோடியே 70 லட்சத்து 29 ஆயிரத்து 369 இழப்பீடு வழங்கப்பட்டன.