வேட்புமனுவில் தகவல் மறைப்பு: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு -ஐகோர்ட்டு விரைவில் விசாரணை
வேட்புமனுவில் கல்வித்தகுதி, சொத்து விவரங்களை முழுமையாக தெரிவிக்காததால் எடப்பாடி பழனிசாமியை எதிர்கட்சித்தலைவர், எம்.எல்.ஏ. ஆகிய பதவிகளில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை.
திண்டுக்கல் அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஏ.சுப்புரத்தினம். 1991-96-ம் ஆண்டுகளில் ஜெயலலிதா தலைமையில் நடந்த அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் பழனி தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தார்.
இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள கோவாரண்டோ வழக்கில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டசபை எதிரக்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் இருந்து 6 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் பல ஆண்டுகளாக அரசியலில் உள்ளார்.
தகுதி நீக்கம்
இவர் கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும்போது, தாக்கல் செய்த வேட்புமனுவில், தன்னுடைய கல்வித் தகுதி, தன் பெயரிலும், தன் குடும்பத்தார் பெயரிலும் உள்ள சொத்து விவரங்களை முழுமையாக தெரிவிக்காமல் வேண்டுமென்றே மறைத்துள்ளார்.
இதுபோன்ற முக்கியமான விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்தாமல் மறைப்பது தீவிர குற்றமாகும். அதுமட்டுமல்ல விதிமீறல் மற்றும் தவறான நடத்தை ஆகும். மேலும், இவர், 2016-17 நிதியாண்டில் இருந்து 2018-19 நிதியாண்டு வரையிலான வருமானத்தையும் தவறாக குறிப்பிட்டுள்ளார்.
வேட்புமனுவில் உண்மைத் தகவல்கள் மறைக்கப்பட்டால், அது வாக்காளர்களின் அடிப்படை உரிமையை தடுப்பது ஆகும். அதனால், அந்த மக்கள் பிரதிநிதியை தகுதி நீக்கம் செய்யலாம் என்று பல்வேறு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
ஊதியம்
ஆனால், எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனு சரியான முறையில் பரிசீலிக்கப்படவில்லை. எனவே, எந்த சட்டத்தின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும், எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏ. பதவியையும் வகிக்கிறார்? என்று எடப்பாடி பழனிசாமியிடம் விளக்கம் கேட்டு, அவரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவர் இதுவரை பெற்ற ஊதியத்தையும் திரும்ப வசூலிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.